ADDED : நவ 14, 2024 06:51 AM

இன்று (நவ. 14) உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம். அதிக உடல் எடையால் ஏற்படக்கூடிய தீங்கினையும், உடலை சீராக வைக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் அறிந்தால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும், வராமல் தடுக்கவும் உதவும்.
உயரத்திற்கு ஏற்ற உடல் எடையை பேண வேண்டும். அதிக உடல் எடை நோய்களுக்கு விரிக்கும் சிவப்பு கம்பளம் என்பதை புரிந்து கொண்டு, எடையை சீராக வைப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் , கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான நோய்களுக்கும் சில கேன்சர் பாதிப்புகளுக்கும் மூலகாரணம் அதிக உடல் எடை.
இந்தியாவில் 21 சதவீத பெண்களும், 19 சதவீத ஆண்களும் அதிக உடல் எடை கொண்டவர்களாக இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. உடல் பருமனால் குழந்தைகளும், இளைஞர்களும் மேற்கண்ட நோயினால் பாதிக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.
கொழு கொழுவென இருக்கும் குழந்தையை விட சரியான எடையுடன் சுறுசுறுப்பான குழந்தையே ஆரோக்கியமான குழந்தை. பாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து சத்தான சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
ஒரே இடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் அமரக் கூடாது. தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்டநாள் நோயின்றி வாழ வழி வகுக்கும் என்பது வள்ளுவரின் வாக்கு. உடலை வைத்து ஒருவரை கேலி, கிண்டல் செய்யமாட்டோம் என இந்நாளில் உறுதி எடுப்போம். உடல் எடையை குறைக்கும் வழிமுறைகளில் அவர்களுக்கு கைகொடுப்போம்.
- டாக்டர் பாண்டியன்மதுரை
98421 63636