/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளி, கந்த சஷ்டியை முன்னிட்டு மெமு சிறப்பு ரயிலுக்கு எதிர்ப்பார்ப்பு
/
தீபாவளி, கந்த சஷ்டியை முன்னிட்டு மெமு சிறப்பு ரயிலுக்கு எதிர்ப்பார்ப்பு
தீபாவளி, கந்த சஷ்டியை முன்னிட்டு மெமு சிறப்பு ரயிலுக்கு எதிர்ப்பார்ப்பு
தீபாவளி, கந்த சஷ்டியை முன்னிட்டு மெமு சிறப்பு ரயிலுக்கு எதிர்ப்பார்ப்பு
ADDED : அக் 10, 2025 04:51 AM
மதுரை: தீபாவளி, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து மதுரை, திருச்செந்துார் ஆகிய இடங்களுக்கு முன்பதிவில்லா 'மெமு' சிறப்பு ரயில்களை இயக்க பயணிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
கடந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறைக்கு சென்னை எழும்பூர் - மதுரை - தாம்பரம் இடையே முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. நாட்டிலேயே அதிக துாரம் (560 கி.மீ.,) இயக்கப்பட்ட இந்த ரயிலில், 2000க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மதுரைக் கோட்டத்தின் வருமானம் பெருக முக்கிய காரணமாகவும் இந்த ரயில் திகழ்ந்தது.
கடந்தாண்டு தீபாவளி, இந்தாண்டு பொங்கல் பண்டிகைகளின் போதும் சென்னை - மதுரை இடையே மெமு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளிடத்தில் வரவேற்பை பெற்றன. தற்போது அக். 20ல் தீபாவளியும், அக். 27ல் கந்த சஷ்டி விழாவும் வருகிறது. அக்., 18 முதலே பயணிகள் கூட்டம் அதிகரிக்க துவங்கும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் நிரம்பி வழிகின்றன.
கந்த சஷ்டி விழாவின் சூரசம்ஹார நிகழ்வைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துார் வருவர். கடந்தாண்டு இந்நிகழ்வுக்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி, துாத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எனவே இந்தாண்டும் சென்னையில் இருந்து மதுரை, திருச்செந்துாருக்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என பயணிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
அகில் பாரதிய கிரஹக் பஞ்சாயத் போக்குவரத்து பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டியன் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு அக். 18ல் எழும்பூர் - மதுரை, அக். 21ல் மதுரை - எழும்பூர் இடையே மெமு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். கந்த சஷ்டியை முன்னிட்டு அக். 26ல் எழும்பூர் - திருச்செந்துார், அக். 27 இரவில் திருச்செந்துார் - எழும்பூர் இடையே 'கார்டு லைனில்' மெமு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும். திருச்செந்துாரில் பிளாட்பாரம் பற்றாக்குறை இருந்தால் ஆறுமுகநேரி வரை சிறப்பு ரயில் இயக்கலாம் என்றார்.