UPDATED : நவ 10, 2026 07:36 PM
ADDED : நவ 10, 2026 07:31 PM
மதுரை: பாசனத்திற்கு தண்ணீர் திறக்காத நீர்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து மதுரை தல்லாகுளம் நீர்வளத்துறை வளாகத்தில் மேலுார், திருமங்கலம், உசிலம்பட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
வைகை, திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் ராமன், மேலுார் ஒருபோக விவசாயிகள் சங்கத் தலைவர் முருகன் பேசியதாவது:
பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கான 45ஆயிரம் ஏக்கருக்கு நவ. 15 ல் தண்ணீர் திறக்க நீர்வளத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலுார், திருமங்கலம் ஒருபோகத்தைச்சேர்ந்த ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் பாசனத்திற்கு அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. உசிலம்பட்டி பகுதியில் கிணற்றுப் பாசனத்தை நம்பி 40 சதவீத விவசாயிகள் சாகுபடியை ஆரம்பித்துள்ளனர். நவ. 15 ல் இருபோக சாகுபடிக்குத் தண்ணீர் திறக்கும் போது, எங்கள் ஒருபோக சாகுபடிக்கு குறைந்தபட்சம் 20 நாட்களுக்காவது தண்ணீர் திறக்க வேண்டும். கண்மாய்களில் தண்ணீர் சேரும் போது கால்நடைகளின் குடிநீருக்கும் நிலத்தடி நீராதாரத்திற்கும் உதவும். தண்ணீர் திறக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என செயற்பொறியாளர் சிவப்பிரபாகரிடம் மனு கொடுத்துள்ளோம் என்றனர்.
