UPDATED : ஜூன் 28, 2026 07:21 PM
ADDED : ஜூன் 28, 2026 07:21 PM
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டியில் பாலாற்றின் குறுக்கே சூரப்பட்டி கிராமத்தில் ரூ.9.50 கோடியில் நீர்வளத் துறையினர் தடுப்பணை கட்டி வருகின்றனர்.
இப்பணியை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்., பாண்டியன் தலைமையில் விவசாயிகள் பார்வையிட்டனர்.
பின்னர் அவர் கூறியதாவது: இந்தத் தடுப்பணையால் மதுரை, மேலுார், சிவகங்கை உள்ளிட்ட 500 கிராமங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும். இது குறித்து கலெக்டரிடம் தடையில்லா சான்று பெறவில்லை. மேலும் 600 ஏரி, குளங்கள் நிரம்புவது தடைபடும். எனவே தரைமட்ட சுவர் அமைத்து அதற்கு மேல் ஆறடி உயரத்திற்கு தடுப்பணை கட்டுவதை கைவிட வேண்டும்.
தரைமட்டச் சுவரை ஒரு அடி உயரத்திற்கு உயர்த்தி அமைத்துக் கொள்ள அப்பகுதி விவசாயிகள் அனுமதியோடு பணி மேற்கொள்ள வேண்டும். அதுவரை தடுப்பணை பணியை நிறுத்த வேண்டும். தடுப்பணையை உரிய முறையில் கட்டவில்லை என்றால் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார். மாநில இளைஞரணி தலைவர் அருள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
