/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மானாவாரியில் மறு விதைப்பு செய்யும் விவசாயிகள்
/
மானாவாரியில் மறு விதைப்பு செய்யும் விவசாயிகள்
ADDED : அக் 06, 2025 04:06 AM
பேரையூர் : பேரையூர் பகுதியில் பயிர்கள் கருகியதால் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் மறு விதைப்பு செய்து வருகின்றனர்.
பேரையூர், சிலைமலைப்பட்டி, பாப்பையாபுரம், கூவலப்புரம், எஸ்.அரசபட்டி, சின்னாரெட்டிபட்டி, பி சுப்புலாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரியில் ஆடிப்பட்டத்தில் பெய்த மழையை நம்பி மக்காச்சோளம், பருத்தி, உளுந்து, பாசி, குதிரைவாலி பயிர்களை சாகுபடி செய்தனர். இது நன்கு முளைத்து வந்தது. அன்பின் மழை இல்லாததால் அனைத்து பயிர்களும் கருகின. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருவதால், தற்போது விவசாயிகள் மறு விதைப்பு செய்து வருகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: ஆடிப்பட்டத்தில் உழவடை செய்து விதைத்தது பயிராக வளர்ந்து, பின்னர் மழையின்றி கருகிவிட்டன. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் மேல் செலவு செய்துள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதால், தற்போது மறு விதைப்பு செய்து வருகிறோம். பணம் இல்லாததால் கடன் வாங்கி விதைக்கிறோம். முந்தைய சாகுபடியை காப்பீடு செய்துள்ளோம். இழப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.