பிராமணபட்டி ‛டோல்கேட்டில் கட்டணம் வசூல் துவங்கியது
பிராமணபட்டி ‛டோல்கேட்டில் கட்டணம் வசூல் துவங்கியது
ADDED : செப் 20, 2026 11:34 PM

திருக்கோஷ்டியூர்: மதுரை மாவட்டம் மேலுார் - சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் திருப்புத்துார் அருகே பிராமணபட்டி டோல்கேட்டில் நேற்று முதல் வாகன கட்டண வசூல் துவங்கியது.
இந்த நான்கு வழிச்சாலையில் திருப்புத்துாரில் இருந்து 6 கி.மீ., துாரத்தில் பிராமணபட்டி டோல்கேட் அமைத்துள்ளனர். சில நாட்களாக இந்த ரோட்டில் முழுமையாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை முதல் பிராமணபட்டி டோல்கேட்டில் வாகன நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியை திட்ட இயக்குனர் முருகபெருமாள் துவக்கி வைத்தார். இந்த டோல்கேட்டில் மொத்தம் உள்ள 8 வழிப்பாதையில் 2 வழிகளில் மட்டுமே ஊழியர்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். மற்ற 6 வழிகளில் 'பாஸ்டேக்' மூலம் தானியங்கி கட்டணம் வசூலிக்கப்படும்.
டோல்கேட்டிற்கு 20 கி.மீ., சுற்றளவில் உள்ள வணிக பயன்பாடு இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு மாத நுழை கட்டணம் ரூ.360க்கான பாஸ் பெறலாம். ஆண்டுக்கு ரூ.3,075 ம் பெறலாம். சிவகங்கை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்த வாகனங்களுக்கு நுழைவு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
