ADDED : ஜூலை 14, 2025 02:32 AM
அலங்காநல்லுார்: வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லுாரில் செயற்கை உரங்கள் விவசாய பணிகளை ஆக்கிரமித்தாலும், மண்ணுக்கு அடிப்படை தேவையாக இயற்கை உரங்களும் தவிர்க்க முடியாதவையாகவே உள்ளன.
இயற்கை உரத்தில் எருக்கு செடி தான் விவசாயிகளின் பாரம்பரிய முதல் 'சாய்ஸ்' ஆக உள்ளது. தொழிலாளர்கள் மூலம் வயல்வெளி சாலையோரம் பூத்துக்குலுங்கும் எருக்கம் செடிகளை அறுவடை செய்து எடுத்து வருகின்றனர்.
அதனை உழுது நீர்பாய்ச்சிய வயலில் பரப்பி மக்கச் செய்து மண்ணுக்கு உரமாக பயன்படுத்துகின்றனர். பூத்த எருக்கு செடிகள் உரத்திற்கு நல்லது. விவசாயம் செழிப்பாக இருக்கும் என்கின்றனர்.
வாடிப்பட்டி தாலுகாவில் வைகை பெரியாறு கால்வாய் பாசனத்தில் முதல் போக சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. இயற்கை உரத்திற்கு தக்கை பூண்டு, சணப்பு செடிகளை வயலில் வளர்த்து மக்க செய்து உரமாக்குகின்றனர். இதனால் மண்ணின் இயற்கை வளம், மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.