/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முருங்கையைத் தொடர்ந்து மிளகாயும் விலை உயர்வு
/
முருங்கையைத் தொடர்ந்து மிளகாயும் விலை உயர்வு
ADDED : டிச 15, 2024 07:18 AM
மதுரை : முருங்கைக்காயைத் தொடர்ந்து பச்சை மிளகாயும் வரத்து குறைந்ததால் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கிலோ ரூ.120க்கு விற்கப்பட்டது.
காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: ஆந்திரா மற்றும் உள்ளூர் வரத்தில் நேற்று முன்தினம் வரை பச்சை மிளகாய் கிலோ ரூ.30 முதல் ரூ.40க்கு விற்பனையானது.
தொடர் மழையால் உள்ளூர் விவசாயிகள் காய் பறிக்கவில்லை. ஆந்திரா வரத்தும் இல்லாததால் ஒரே நாளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து முதல் தர உருட்டு, சம்பா மிளகாய் வகைகள் கிலோ ரூ.120 க்கும் 2ம் ரகம் ரூ.80க்கும் விற்கப்பட்டது என்றார்.
வெண்டைக்காய் ரூ.15 முதல் ரூ. 20க்கும் தக்காளி ரூ.60 லிருந்து ரூ.30 ஆக குறைந்தும் விற்பனையானது.
முருங்கைக்காய் ரூ.400ல் இருந்து குறைந்து கிலோ ரூ.200க்கு விற்கப்பட்டது. பாகல், பீர்க்கு, சுரைக்காய் 30, புடலை 40, சீனி அவரைக்காய் 20, முருங்கை பீன்ஸ், சேனை, சேம்பு, உருளை 60, அவரை 50 - 70, நாட்டு வெங்காயம் 50 - 80, கருணைக்கிழங்கு கிலோ ரூ.90க்கு விற்பனையானது. ஒட்டு வெங்காயம் வரத்து இல்லை.