/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம்
/
மார்க்கெட்டில் காய்கறி கழிவுகளால் துர்நாற்றம்
ADDED : ஜன 24, 2025 04:45 AM
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மூன்று நாட்களாக குப்பை அள்ளப்படாததால் டன் கணக்கில் குப்பை தேங்கி அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து மாட்டுத்தாவணி மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது:
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் தினமும் 20 டன் குப்பை சேரும். தினமும் காலை 9:00 மணி, மதியம் 2:00 மணி என 'ஷிப்ட்' முறையில் மாநகராட்சி பணியாளர்கள் குப்பையை சுத்தம் செய்து வந்தனர். தற்போது ஒருமுறை மட்டுமே சுத்தம் செய்ய வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்பு குப்பையை அகற்றிய பின் இதுவரை அகற்றவில்லை. இதனால் குப்பை மலைபோல் குவிந்துள்ளது.
நிறைய கடைகளின் முன்பும் குப்பை குவிந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் காய்கறி வாங்காமல் முகம் சுளித்து செல்கின்றனர். குப்பையில் இருந்து கழிவுநீர் தொடர்ந்து வெளியேறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவில் இருந்து புழுக்கள் வெளியேறுவதால் கடையை திறக்கவும் முடியவில்லை. முன்பு போல குப்பையை தினமும் அள்ள மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.