ADDED : ஏப் 14, 2026 11:42 PM

திருப்பரங்குன்றம்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமாக நடந்து வரும் திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடந்தது.
நான்கு ஏர் பூட்டுதல்: கிராமத்தினர், விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.
பின்பு கல்வெட்டு குகைக் கோயில் முன்பு கிராமத்தினர், ஏழு குளம் பாசன விவசாயிகள் கூட்டம் நடத்தி திருவிழா கொண்டாட்டங்கள், விவசாயம் உள்பட அனைத்து தொழில்களுக்கான கூலி நிர்ணயம் செய்து ஆலோசனை நடத்தினர். இரவு கிராமத்தினர் சார்பில் கோயிலில் பூஜை நடந்தது.
மழை வேண்டி, விவசாயம் செழிக்க, மக்கள் நலம் பெற ஆண்டாண்டு காலமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது என கிராமத்தினர் தெரிவித்தனர்.
கொட்டாம்பட்டி: கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டி, பெரிய, சின்ன கற்பூரம்பட்டி பகுதி, மந்தை அம்மன் கோயில்களில் தமிழ் மாத பிறப்பை முன்னிட்டு நல்லேறு பூட்டுதல் விழா கொண்டாடப்பட்டது. இதில் விவசாயிகள் கலப்பை, மண்வெட்டி உபகரணங்களை சுவாமி முன்பு வைத்து விவசாயம் செழிக்க வழிபட்டனர். தொடர்ந்து விவசாயிகள் தங்கள் வயலில் உழவுப் பணிகளை துவங்கினர்.
