/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விபத்து அபாயத்தில் நான்கு வழி சாலைப் பணிகள்
/
விபத்து அபாயத்தில் நான்கு வழி சாலைப் பணிகள்
ADDED : நவ 28, 2024 05:45 AM
திருமங்கலம்: திருமங்கலம் - ராஜபாளையம் இடையே தற்போதுள்ள ரோட்டை, 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. ஐம்பது சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் மீதி பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் விருதுநகர் - திருமங்கலம் நான்கு வழிச் சாலை அண்டர் பாஸ் பாலத்தை கடந்தவுடன், ஒரு பகுதியில் மட்டுமே போக்குவரத்து உள்ளது.
ஆலம்பட்டி சேடப்பட்டி ரோடு பிரிவில் பாலம் வேலை நடப்பதால் மற்றொரு ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு பகுதியில் மட்டும் போக்குவரத்து நடைபெறும் என்ற அறிவிப்பு வைக்கப்படவில்லை. ரோட்டின் ஆரம்பத்தில் சில தடுப்புகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. அதுவும் அந்த இடத்தில் லாரிகள் முதல் பல்வேறு வாகனங்களை விதிமுறை மீறி நிறுத்தி வைத்துள்ளனர்.
இரவு நேரங்களில் விளக்கு வசதியும் செய்யப்படவில்லை. இதனால் இரவு வாகனங்கள் மட்டுமின்றி, பகலில் வரும் வாகனங்களும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பல இடங்களில் ரோடு மட்டத்தை விட பக்கவாட்டு தரைத்தளம் தாழ்ந்து இருப்பதால் டூவீலர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வேலை நடைபெறும் இடங்களில் முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கவில்லை.
ராஜபாளையம் ஏ.டி.எம்., நுழைவு பகுதி மற்றும் கட்ராம்பட்டி பிரிவு அருகே திறந்த நிலையில் தரைமட்ட கிணறுகள் உள்ளன. அவற்றை மூட இதுவரை ஒப்பந்ததாரர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று இந்த பகுதியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர்களும் இக்குறைகளை கண்டு கொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.