ADDED : செப் 28, 2026 06:35 PM
சோழவந்தான்: மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக இன்சுலின் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் ஆலோசனைப்படி இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகள் உயிர்காக்கும் மருந்தான இன்சுலினை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். கிராமப்புற பயனாளிகள் இன்சுலின் பெற, தனியார், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் அலைச்சலுடன், உடல்சோர்வு, பொருட்செலவு ஏற்படுகிறது.
இதனை மாற்ற மன்னாடிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இலவச பரிசோதனையுடன் இன்சுலின் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சுற்றுவட்டார மக்கள் பயனடைவர். சர்க்கரை நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் சுகாதார நிலையத்திற்கு நேரடியாக சென்று இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை மூலம் தகுதியுள்ளோரை கண்டறிந்து இன்சுலின் இலவசமாக வழங்கப்படும் என மருத்துவ அலுவலர் டாக்டர் அருண்குமார், மருந்தாளுனர் மாணிக்கம் தெரிவித்தனர்.
