ADDED : டிச 03, 2025 06:40 AM
பேரையூர்: பேரையூர் பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் இப்பகுதி மக்கள் அவதியில் உள்ளனர்.
தினமும் பத்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. காலையில் ஏற்படும் மின்தடையால் இல்லத்தரசிகள் சமையல் செய்ய இயலாமல் சிரமப்படுகின்றனர். இரவில் ஏற்படும் இந்ததடையால் மாணவர்கள் படிக்க முடியாமலும், முதியோர் கொசுத் தொல்லையால் துாங்க இயலாமலும் உள்ளனர். இந்நிலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நாளான நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பா.ஜ.க மாநில அமைப்பு சாரா செயலாளர் சோமசுந்தரம் கூறியதாவது. கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு வேண்டும் என்றே மின்சாரத்தை துண்டித்து விட்டனர். இதனால் வீடுகளில் பெண்கள் கார்த்திகை தீபம் ஏற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
மின்சாரத் துறை அதிகாரிகளுடன் கேட்டால் மழுப்பலாக பதில் கூறுகின்றனர். பண்டிகை நாட்களில் மின்சாரம் தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

