/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீ விபத்து சிகிச்சையில் தானம் : அரசு மருத்துவமனை வங்கியால் கிடைத்த மறுவாழ்வு
/
தீ விபத்து சிகிச்சையில் தானம் : அரசு மருத்துவமனை வங்கியால் கிடைத்த மறுவாழ்வு
தீ விபத்து சிகிச்சையில் தானம் : அரசு மருத்துவமனை வங்கியால் கிடைத்த மறுவாழ்வு
தீ விபத்து சிகிச்சையில் தானம் : அரசு மருத்துவமனை வங்கியால் கிடைத்த மறுவாழ்வு
UPDATED : பிப் 14, 2025 09:18 AM
ADDED : பிப் 14, 2025 06:19 AM

மதுரை: தென் மாவட்ட தீவிபத்துகளில் பாதித்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோரில் 65 பேர் தோல் தானம் பெற்றதன் மூலம் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
சமையலறையில் ஏற்படும் தீவிபத்து, வெடி விபத்து, பட்டாசு தொழிற்சாலை விபத்துகளால் தீக்காயம் அடைவோர் அதிகம். மதுரை அரசு மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவில் 2022ம் ஆண்டில் 304 பேர், 2023 ல் 234 பேர், 2024 ல் 235 பேர் தீ விபத்துகளில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். மூன்றாண்டுகளில் 13 வயதுக்கு மேற்பட்ட 773 பேரில் 366 பேர் இறந்துள்ளனர்.
அத்துறையின் தலைவர் டாக்டர் சுரேஷ் கூறியதாவது: 60 சதவீதத்திற்கும் மேலான தீக்காயம் எனில் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு. தென் மாவட்டங்களில் இருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அதிகம் வருகின்றனர். ஆழமான தீக்காயமாக இருந்தால் அவர்களின் தொடையின் தோல் எடுத்து காயத்தை சரிசெய்வோம். அதற்கு வாய்ப்பில்லை எனில் இங்குள்ள தோல் வங்கியில் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் மூளைச்சாவு நபர்களின் தோலை பெற்று பொருத்துகிறோம்.
தோல்தான சிகிச்சை
இது அதிகபட்சமாக 3 முதல் 4 வாரங்களுக்கு பொருந்தியிருக்கும். அதன் பின் அவர்களது தோலை எடுத்து பொருத்த வேண்டும். ஆழமில்லாத காயங்களுக்கு 'கொலாஜன்' எனப்படும் செயற்கை தோல் மூலம் சிகிச்சை அளிக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன் துவக்கிய தோல் வங்கியின் உரிமம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 65 பேருக்கு தோல் தானம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நவீன ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் தீவிபத்தில் மீண்டவர்களுக்கு சிகிச்சை தந்து புனர்வாழ்வு அளிக்கிறோம் என்றார்.

