/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெல்லம், கருப்பட்டிக்கு தேவை முழு வரிவிலக்கு
/
வெல்லம், கருப்பட்டிக்கு தேவை முழு வரிவிலக்கு
ADDED : அக் 19, 2025 02:54 AM
மதுரை: ஜி.எஸ்.டி.,யின் கீழ் வெல்லம், கருப்பட்டி, உட்பட பல்வேறு உணவுப்பொருட்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப் பிரகாசம் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., வரிவிதிப்பின் கீழ் அப்பளத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே வகையைச் சேர்ந்த வற்றல், வடகத்திற்கு வரி விதிக்கப்படுகிறது. ஈர இட்லிமாவு, வெல்லம், கருப்பட்டி, வற்றல், வடகத்திற்கு முழு வரிவிலக்கு அளிக்கவேண்டும். கற்பூரத்திற்கான 18 சதவீதத்தை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
காகித மூலப்பொருளுக்கு 18 சதவீத வரி, அதன் மூலம் தயாரிக்கப்படும் அட்டைப்பெட்டி, நோட்டு புத்தகத்திற்கு 5 சதவீத வரி என உள்ளது. அதை சரிசெய்து காகிதத்திற்கான வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். களிமண் செங்கல்லுக்கு உள்ளீட்டு வரியுடன் 5 சதவீத வரி விதிக்க வேண்டும். ஒரே கடையில் வைத்து விற்கப்படும் உரத்திற்கு 5 சதவீதம், பூச்சிக்கொல்லி மருந்திற்கு 18 சதவீதம் என வேறுபாடாக உள்ளது. இதையும் 5 சதவீதமாக குறைக்க வேண்டும்.
தமிழகம், புதுச்சேரியை உள்ளடக்கிய ஜி.எஸ்.டி., குறைதீர் கமிட்டியில் தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க பிரதிநிதியையும் சேர்த்துள்ளதை வரவேற்கிறோம். இந்த கமிட்டி கூட்டத்தில் வரிப்பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்றனர்.