UPDATED : ஜூன் 29, 2026 07:25 PM
ADDED : ஜூன் 29, 2026 07:22 PM
மதுரை: தோட்டக்கலை பயிர்களில் நுாற்புழுக்களால் 10 முதல் 30 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உயிரியல் முறையில் பூஞ்சாணங்களைப் பயன்படுத்தி இவற்றை கட்டுப்படுத்தலாம் என்கிறார் மதுரை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அருள்மணி.நிலையற்ற தட்பவெப்பநிலை, பூச்சி, நோய் தாக்குதல், களைகள், கண்களுக்குப் புலப்படாத நுாற்புழுக்களால் பயிர் சாகுபடியில் பாதிப்பு ஏற்படுகின்றன. மண்ணில் வாழும் நுாற்புழுக்கள் தாவர வேர்களைத் தாக்கி நீர், ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி பயிர்களின் வளர்ச்சியையும் மகசூலையும் பாதிக்கின்றன.
போச்சோனியா கிளமிடோஸ்போரியா, பர்புரியோசிலியம் லிலாசினம் வகை உயிரியல் பூஞ்சாணங்களை பயன்படுத்தினால் பயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது; மண்வளம் பாதுகாக்கப்படும். 100 கிலோ மட்கிய தொழு உரத்துடன் ஒரு கிலோ பர்புரியோசிலியம் லிலாசினம் கலந்து ஈரப்படுத்தி 2 முதல் 3 வாரம் வைத்திருந்து அடியுரமாக இடவேண்டும். திரவ வடிவ திரவங்களை ஏக்கருக்கு 1 முதல் 2 லிட்டர் என்ற அளவில் தரை வழியாக கொடுக்கலாம்.
பழப் பயிர்களுக்கு வயதிற்கு ஏற்றவாறு 500 கிராம் முதல் 1 கிலோ இடலாம். போச்சோனியா கிளமிடோஸ்போரியா உயிரியல் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு 2 கிலோ அளவில் மட்கிய தொழு உரத்துடன் கலந்து இட வேண்டும்.இவை பெண் நுாற்புழுக்களைம் முட்டைகளையும் அழிக்கிறது. வேர் ஆரோக்கியத்தை மேம்படுத்தி பயிரின் வளர்ச்சி, மகசூலை அதிகரிக்கும். பூஞ்சாணங்களை பயன்படுத்தும் போது மண் ஈரப்பதமாக இருக்க வேண்டும். அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும் பூஞ்சாணங்களை வாங்கி விவசாயிகள் பயனடையலாம் என்றார்.
