ADDED : ஆக 29, 2025 03:52 AM
எழுமலை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஹிந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழாக் குழு சார்பில் எழுமலை வட்டார கிராமங்களில் 20 விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று மாலை 5:00 மணிக்கு இந்த சிலைகளை எழுமலை ராஜகணபதி கோயில் முன்பு கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஹிந்து ஆலய பாதுகாப்பு மாநில அமைப்பாளர் கிருஷ்ணராஜ், ஹிந்து முன்னணி மதுரை புறநகர் மாவட்ட துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பா.ஜ., ஓ.பி.சி., அணி மதுரை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் மாத்துாரான், ஹிந்து முன்னணி சேடபட்டி ஒன்றிய நிர்வாகிகள் தலைவர் லட்சுமணன், துணைத் தலைவர் மாசானகருப்பையா, பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று எழுமலை பெரியகுளம் கண்மாயில் கரைத்தனர்.
மேலுார்: ஹிந்து மகா சபா சார்பில் நடந்த ஊர்வலத்திற்கு மாநில துணைத்தலைவர் செல்லதுரை, விவசாய அணி செயலாளர் ரமேஷ் பாண்டியன் தலைமை வகித்தனர். நிர்வாகி கணேசன் துவக்கி வைத்தார். சிவன் கோயிலில் ஊர்வலமாக புறப்பட்டு, மண் கட்டி தெப்பகுளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. எஸ்.பி., அரவிந்த் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாடிப்பட்டி: ஹிந்து முன்னணி சார்பில் நடந்த விழாவிற்கு மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். பா.ஜ., மாநில பொது செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், ஓ.பி.சி., அணி முன்னாள் மாநில துணைத் தலைவர் முரளி ராமசாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் மாயகிருஷ்ணன், ஜெயபால், ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கணேசன், சீனிவாசன் பாலகிருஷ்ணன் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பொங்கல், கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்பட்டது.

