/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கஞ்சா 'பார்க்' ; கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., மண்டல தலைவர் பகிரங்கம்; பராமரிப்பற்ற மாநகராட்சி பூங்காக்களில் விற்பனை ஜோர்
/
கஞ்சா 'பார்க்' ; கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., மண்டல தலைவர் பகிரங்கம்; பராமரிப்பற்ற மாநகராட்சி பூங்காக்களில் விற்பனை ஜோர்
கஞ்சா 'பார்க்' ; கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., மண்டல தலைவர் பகிரங்கம்; பராமரிப்பற்ற மாநகராட்சி பூங்காக்களில் விற்பனை ஜோர்
கஞ்சா 'பார்க்' ; கவுன்சில் கூட்டத்தில் தி.மு.க., மண்டல தலைவர் பகிரங்கம்; பராமரிப்பற்ற மாநகராட்சி பூங்காக்களில் விற்பனை ஜோர்
ADDED : டிச 28, 2024 07:07 AM

மதுரை: 'மதுரையில் பராமரிக்கப்படாத மாநகராட்சி பூங்காக்களில் கஞ்சா விற்பனை நடக்கிறது' என கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆளும் கட்சி மண்டல தலைவர் முகேஷ் சர்மா பகிரங்கமாக புகார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. துணைமேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்., எம்.எல்.ஏ., இளங்கோவன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்பின் நடந்த விவாதம்:
வாசுகி, மண்டலம் 1 தலைவர்: ரோடுகள் சேதமடைந்துள்ளன. சீரமைக்க வேண்டும். பாதாளச் சாக்கடை பொங்கி கண்மாய்களில் கலக்கின்றன. அங்கு துர்நாற்றம் வீசுகிறது. கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக வார்டுகளில் குழாய் பதித்து 4 மாதங்களாகிவிட்டன. எப்போது இணைப்பு கிடைக்கும். குப்பை அள்ள போதிய வாகனங்கள் இல்லை. நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.
சரவணபுவனேஸ்வரி, மண்டலம் 2 தலைவர்: வார்டுகளில் உள்ள நிரந்தரப் பணியாளர்கள் ஓய்வு பெற்றால் புதியவர் நியமிக்கப்படவில்லை. பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. வி.ஐ.பி.,க்கள் வருகையின்போது துாய்மை பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. பம்பிங் ஸ்டேஷன்கள் மோசமாக உள்ளன. சீராக இயக்க வேண்டும். மாநகராட்சி நிதியில் வார்டுகளில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும்.
முகேஷ் சர்மா, மண்டலம் 4 தலைவர்: இணைப்பு வார்டுகளில் தெரு விளக்குகள் இல்லை. இரவில் குற்றங்கள் அதிகம் நடக்கின்றன. பராமரிக்கப்படாத மாநகராட்சி பூங்காங்களில் சமூக விரோத செயல்பாடுகள் அதிகம் நடக்கின்றன. 44வது வார்டு ஜோசப் மாநகராட்சி பூங்காவில் கஞ்சா வியாபாரம் நடக்கிறது. போலீசார் கைது செய்துள்ளனர். பூங்காக்களை பராமரிக்க வேண்டும். மயானங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். தனியார் தொண்டுநிறுவனம் வசூலிக்கும் கட்டணம் குறித்து தணிக்கை நடத்த வேண்டும்.
சுவிதா, மண்டலம் 5 தலைவர்: இணைப்பு வார்டுகளில் பாதாளச்சாக்கடை வசதி எப்போது கிடைக்கும். தாழ்வான பகுதிகளில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பிரச்னை அதிகம் உள்ளது. நடவடிக்கை தேவை. போதிய பணியாளர்கள் இல்லாததால் திருவிழாக்களின்போது திருப்பரங்குன்றத்தில் துாய்மை பணி சவாலாக உள்ளது.
சோலைராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: எப்போது மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுகிறது. விரிவாக்கத்தின்போது கப்பலுார் டோல்கேட் வரையும், துவரிமான், நாகமலைபுதுக்கோட்டை ஐ.டி.,பார்க், ஆண்டார்கொட்டாரம் வரை மாநகராட்சிக்குள் கொண்டுவரவேண்டும். ரோடுகள் தரமாக அமைப்பதில்லை. ரோடு பணிகளில் மேயர், கமிஷனர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் வேண்டும். மழைநீர் கால்வாய்கள் தற்போது வரை முழுமையாக துார்வாரப்படவில்லை. பம்பிங் ஸ்டேஷன்களில் 85 மோட்டார்கள், 35 ஜெனரேட்டர்கள் பழுதாக உள்ளன. இதனால் கழிவுநீர் தேங்கும் பிரச்னை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு வேண்டும்.
கார்த்திகேயன், காங்.,: பார்க்கிங் வசதி இன்றி திருமண மண்டபங்கள் செயல்படுகின்றன. கே.கே.நகரில் மாநகராட்சி விதிமீறி ஒரு மண்டபத்தில் 6 புதிய அறைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய ரோடுகளில் தரமில்லை. தீர்மானம் நகல் கூட்டம் நடக்கும் முதல்நாள் மாலை தான் வழங்கப்படுகிறது.
மேயமர்: மூன்று நாட்களுக்கு முன்பே தீர்மான நகல்கள் அனுப்புவதற்கு கையெழுத்திட்டேன். வரும்காலங்களில் முன்கூட்டியே வழங்கப்படும்.
கமிஷனர்: விதிமீறல் மண்டபத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து விதிமீறினால் சீல் வைக்கப்படும்.
குமரவேல் மார்க்சிஸ்ட் கம்யூ.,: நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது. 5 ஆண்டுகளில் 51,819 பேரை நாய் கடித்துள்ளது. 32 பேர் பலியாகியுள்ளனர். ஆனால் நாய் பிடிக்க இரண்டு வண்டிகளே உள்ளன. அதிலும் ஒன்று பழுதாக உள்ளது.
சண்முகவள்ளி, அ.தி.மு.க.,: சாக்கடை ரோட்டில் ஓடும் பிரச்னைகள் தீரவில்லை. என்.எம்.ஆர்., ரோட்டில் குடிநீர் தொட்டி அருகே மாடுகள் கட்டிப்போடுகின்றனர். சில நாட்களில் 'பேட்ச் ஒர்க்' பார்க்கும்படி தான் புதிய ரோடுகள் தரம் உள்ளது.
ஜெயசந்திரன் (சுயே.,): அழகுமுத்துகோனுக்கு சிலை வைக்க வேண்டும் என கோரப்பட்டு வருகிறது. இதுவரை நடவடிக்கை இல்லை. டி.எம்.எஸ். சவுந்திரராஜனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக பாடுபட்டார் என தெரியவில்லை. பணம் வாங்கிக்கொண்டுதான் பாடினார்.
மேயர்: இதுபோன்று விமர்சித்து பேச வேண்டாம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

