/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்
/
'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்
'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்
'அடுத்த வாரம் வரை காஸ் சிலிண்டர் இருப்பு உள்ளது' * வினியோகஸ்தர்களுடன் ஆலோசனை நடத்திய கலெக்டர் தகவல்
ADDED : மார் 14, 2026 07:01 AM

மதுரை: மதுரை மாவட்டத்தில் காஸ் வினியோகம் தொடர்பாக வினியோகஸ்தர்களுடன் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., அன்பழகன், மருத்துவ கல்லுாரி டீன் அருள்சுந்தரேஷ்குமார், மாவட்ட வினியோக அலுவலர் ராஜகுரு, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வன், அங்கன்வாடி திட்ட அலுவலர் ஷீலாராணி மற்றும் காஸ் வினியோகஸ்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கலெக்டர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 3 பிரதான எண்ணெய் நிறுவனங்கள் இயங்குகின்றன. 68 முகவர்கள் காஸ் சப்ளை செய்கின்றனர். மாவட்ட அளவில் 16 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் உள்ளன. நாளொன்றுக்கு 21 ஆயிரத்து 212 சிலிண்டர்கள் தேவைப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் 3 நிறுவனங்களிடமும் அடுத்த வாரம் வரை வினியோகிக்கும் அளவுக்கு சிலிண்டர்கள் இருப்பு உள்ளது.
அரசு அறிவித்துள்ளபடி சிலிண்டர் வினியோகத்தில் வீடுகளுக்கு முதல் முன்னுரிமை வழங்க வேண்டும். அடுத்து அரசு, தனியார் பள்ளி, கல்லுாரி விடுதிகள், அரசு, தனியார் மருத்துவமனைகள், காலை உணவு, சத்துணவு, அங்கன்வாடி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க உங்கள் ஒத்துழைப்பு தேவை. இவை தவிர, சிலிண்டர் வினியோகத்தில் ஏற்ற இறக்கம் இருப்பதால், மாற்று ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காக மின்சார அடுப்பு (இண்டக்ஸன் ஸ்டவ்) தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். விறகு வைத்து சமைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தெரிவித்துள்ளோம்.
எனவே இதில் லாபநோக்கின்றி, மனிதநேயத்தோடு செயல்பட வேணடும். சிலிண்டர்களை செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தினாலோ, பதுக்கினாலோ போலீசார் மூலம் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றார்.
பின்னர் எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் சிலிண்டர்கள் இருப்பு நிலை, சமீபத்தில் வழக்கத்திற்கு மாறாக சிலிண்டர் புக்கிங் செய்கின்றனரா எனக்கேட்டு, தட்டுப்பாடை சமாளிப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

