ADDED : செப் 25, 2026 05:42 PM
மேலுார்: கிடாரிப்பட்டி லதாமாதவன் பொறியியல் கல்லுாரி இறுதி ஆண்டு மாணவிகள். நோயாளிகளுக்கு ஏற்றப்படும் பாட்டிலில் குளுக்கோஸ் முடிந்ததும் ஒலி, ஒளி எழுப்பும் குளுகார்டு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
இக்கல்லுாரியின் ஐ.ஐ.இ.சி. (இன்னோவேஷன் இன்குபேஷன் என்டர்பிரினீயர்ஷிப் டெவலப்மென்ட் செல்) மாணவிகள் மோகன சுகிதா, தர்ஷினி, பிரியதர்ஷினி மற்றும் ஒருங்கிணைப்பாளர் முருகன் இணைந்து குளுக்கோஸ் ட்ரிப் கண்காணிப்பு, எச்சரிக்கை விடும் குளுகார்டு கருவியை கண்டுபிடித்துள்ளனர். இம்மாணவியரை செயல் இயக்குனர் தினேஷ், இணைசெயலாளர் ஜெகன், முதல்வர் ஞானசேகரன் பாராட்டினர்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஏற்றப்படும் குளுக்கோஸ் பாட்டிலை செவிலியர் நேரடியாக பார்த்து கண்காணிக்க வேண்டும். பல நோயாளிகளை ஒரே நேரத்தில் கவனிக்கும்போது குளுக்கோஸ் தீர்ந்து விட்டால் ஐ.வி., குழாயில் காற்று புகுவதோடு நோயாளியின் உடலில் இருந்து ரத்தம் குளுக்கோஸ் பாட்டிலுக்கு செல்லும் அபாயம் உள்ளது.
கண்டுபிடிப்பு குறித்து மாணவிகள் கூறியதாவது : ஆடினோ யூ நோ என்ற மதர்போர்டு கருவியை, கெப்பாசிட்டி லிக்யூட் லெவல் சென்சாருடன் இணைத்து பிளாஸ்டிக் பெட்டியில் பொருத்தியுள்ளோம். இப் பெட்டியில் உள்ள மதர் போர்டு மூலம் சென்சாரில் குளுக்கோஸ் அளவை பதிவு செய்து குளுக்கோஸ் பாட்டில் மாட்டியுள்ள அதே ஸ்டாண்டில் பிளாஸ்டிக் பெட்டியை மாட்டவேண்டும்.
இந்த சென்சார் குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள திரவத்தின் அளவை தொடர்ந்து கண்காணித்து குளுக்கோஸ் அளவு குறைந்ததும் உடனடியாக சத்தமிடும். அதிலுள்ள எல்.இ.டி.., பல்பு ஒளிர்ந்து செவிலியரை எச்சரிக்கை செய்யும். இதனால் செவிலியர்கள் குறித்த நேரத்தில் குளுக்கோஸ் பாட்டிலை நிறுத்துவதன் மூலம் தவறுகள் தவிர்க்கப்பட்டு நோயாளியின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. ரூ.2,500 செலவில் தயாரிக்கப்படும் குளுகார்டு கருவியினால் ஒரே செவிலியர் ஒரே நேரத்தில் ஏராளமான நோயாளிகளை கவனிக்க முடியும் என்றனர்.
