/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனஉளைச்சலை ஏற்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டம்: நிபந்தனைகளை களைய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
/
மனஉளைச்சலை ஏற்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டம்: நிபந்தனைகளை களைய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
மனஉளைச்சலை ஏற்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டம்: நிபந்தனைகளை களைய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
மனஉளைச்சலை ஏற்படுத்தும் மருத்துவ காப்பீடு திட்டம்: நிபந்தனைகளை களைய அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 25, 2025 10:55 PM

மதுரை: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்தில் 'பேக்கேஜ்' முறை உள்ளிட்ட மனஉளைச்சலை ஏற்படுத்தும் நிபந்தனைகளை களைய வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் மாதம் தலா ரூ.300 பிடித்தம் செய்யப்படுகிறது. ஓய்வூதியர்கள் ரூ.495 செலுத்துகின்றனர். இத்திட்ட அரசாணையில் கட்டணமில்லா சிகிச்சை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கண் சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரம் (ஒரு கண்), கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் தவிர பிற எந்த நோய்க்கு சிகிச்சை பெற்றாலும் முழுமையான காப்பீட்டு தொகையை பெற முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு நோய்க்கும், 'இது எங்கள் மருத்துவமனையில் இல்லை, இந்நோய்க்கு இவ்வளவு தான் காப்பீடு தொகை' என அவ்வப்போது ஏதாவது நிபந்தனைகளைக் கூறி சிகிச்சைக்கு செல்லும் அரசு ஊழியர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதனால் காப்பீடு திட்டம் இருந்தும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள ஒவ்வொரு மருத்துவமனையும் ஒவ்வொரு வகை 'பேக்கேஜ்' நடைமுறையை பின்பற்றுகின்றன. காது, மூக்கு, தொண்டை, பல் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற முடியாது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் களையப்பட வேண்டும்.
கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சீனிவாசன் கூறியதாவது: தற்போதுள்ள காப்பீடு திட்டம் ஜூனில் முடிகிறது. அதற்கு பிறகு ஒப்பந்தம் நீட்டிப்பு அல்லது புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என அரசு முடிவு செய்யும். தற்போது நடைமுறையில் உள்ள காப்பீடு திட்டம் யுனைடெட் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை வேறு இரு நிறுவனங்களுக்கு வழங்கி விட்டது. இதன்படி 20 மாவட்டங்களில் ஒரு நிறுவனமும், 18 மாவட்டங்களில் மற்றொரு நிறுவனமும் ஒப்பந்தம் பெற்றுள்ளன. இதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட இந்நிறுவன அலுவலர்களை தொடர்புகொள்ள முடிவதில்லை.
தற்போது அரசு ஊழியர்கள் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர ஊனமடைந்தாலோ ரூ.ஒரு கோடி இழப்பீடு உள்ளிட்ட திட்டங்களுடன் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. ஏழு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம்.
அதற்கு முன் நடைமுறையில் உள்ள திட்டத்தில் அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்னைகளை களைய வேண்டும். சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பும் வரை கட்டணம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி அவர்களின் கோரிக்கையை புதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார்.