UPDATED : மே 13, 2026 09:34 PM
ADDED : மே 13, 2026 09:32 PM

திருமங்கலம்: திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி சமீபத்தில் பொன்விழாவை கொண்டாடியது. ஆண்டுக்கு 50 மாணவர்கள் இளநிலை படிப்பில் சேர்கின்றனர். 4 ஆண்டு படிப்பு, ஓராண்டு பயிற்சி முடித்து ஆண்டுதோறும் 50 மாணவர்கள் வெளியேறும் நிலையில், இவர்கள் மேற்படிப்புக்காக அகில இந்திய ஒதுக்கீட்டை சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதில் வாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளதால் இக்கல்லுாரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மே 13, இதே கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசு வேலை வாய்ப்பில் ஆண்டிற்கு 2 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் நிலையில் கூடுதல் பணியிடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும்கூறி கல்லுாரி வளாகத்திற்குள் 250 மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை முதல்வர் ராதாமணி சமரசம் செய்தார்.
மாணவர்கள் கூறுகையில், ''ஒவ்வொரு முறையும் கல்லுாரி நிர்வாகம் சமாதானப்படுத்தி போராட்டத்தை கைவிட வைப்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்'' என்றனர்.
