அரசின் கனவு இல்ல கட்டுமான பணி நிறுத்தம்: மருகும் மாற்றுத்திறனாளிகள்
அரசின் கனவு இல்ல கட்டுமான பணி நிறுத்தம்: மருகும் மாற்றுத்திறனாளிகள்
UPDATED : டிச 13, 2025 08:07 AM
ADDED : டிச 13, 2025 06:27 AM

வாடிப்பட்டி: மதுரை மேற்கு ஒன்றியம் தேனுார் ஊராட்சி கட்டப்புளி நகரில் கலைஞர் கனவு இல்ல கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் வருத்ததில் உள்ளனர்.
இவர்களுக்கும், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கும் தனிநகரை முதன்முறையாக உருவாக்க 400 பேருக்கு இலவச வீடுகள் வழங்க 8 ஏக்கருக்கு கூடுதலான இடம் கையகப்படுத்தப்பட்டது. இதில் முதற்கட்டமாக 195 வீடுகள் கட்ட 4 ஒப்பந்ததாரர்கள் மூலம் ஜூலை 28ல் அமைச்சர் மூர்த்தி தலைமையில் பூமி பூஜையுடன் பணிகள் துவங்கின.
டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் பயனாளிகளுக்கு வீடுகளை வழங்குவார், தெருக்களில் வடிகால் வசதி, ரேஷன் கடை, மேல்நிலைத் தொட்டி, குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களுடன் இந்நகர் அமையும் என அமைச்சர் மூர்த்தி பேசியிருந்தார்.
அதற்கு ஏற்ப 2 மாதங்களில் வீடுகள் 'லிண்டல்' வரை எழுந்தன. அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்தனர். ஆனால் தற்போது நிலை அதுவல்ல. பணிகள் 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக பயனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாற்றுத்திறன் பயனாளி ராஜமூர்த்தி: முதலில் குறைவான வீடுகளுக்கு ஒதுக்கிய நிதியில் அனைத்து வீடுகளின் பணியையும் துவக்கி உள்ளனர். இதனால் ஒப்பந்ததாரர்களுக்கான தொகை வழங்காததால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை மாற்றுத்திறனாளிகள் பார்க்க முடியாதபடி பாதைகளில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. தென் கிழக்கில் தாழ்வான பகுதி வீடுகளை 2 அடிக்கு மழை நீர் சூழ்ந்து நிற்கிறது.
தண்ணீர் வெளியேற வடிகால் வசதிகள் இல்லை. தெருக்களிலும் வடிகால், மேல்நிலை குடிநீர் தொட்டி வசதிகள் செய்து தரப்படவில்லை. முன்பிருந்த மேற்கு ஒன்றிய அதிகாரிகள் அடிக்கடி வந்து பணிகளை பார்வையிடுவர். எங்களிடமும் விசாரிப்பார்கள். தற்போது நிலை அப்படி இல்லை. அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம். பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
