/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண்களை தரக்குறைவாக பேசிய '‛ஜென்டில்மேன்'; கடவுளை வழிபடுவோரின் உணர்வுகளை காலால் மிதித்தவர் பொன்முடி குறித்து கவர்னர் ரவி ஆவேசம்
/
பெண்களை தரக்குறைவாக பேசிய '‛ஜென்டில்மேன்'; கடவுளை வழிபடுவோரின் உணர்வுகளை காலால் மிதித்தவர் பொன்முடி குறித்து கவர்னர் ரவி ஆவேசம்
பெண்களை தரக்குறைவாக பேசிய '‛ஜென்டில்மேன்'; கடவுளை வழிபடுவோரின் உணர்வுகளை காலால் மிதித்தவர் பொன்முடி குறித்து கவர்னர் ரவி ஆவேசம்
பெண்களை தரக்குறைவாக பேசிய '‛ஜென்டில்மேன்'; கடவுளை வழிபடுவோரின் உணர்வுகளை காலால் மிதித்தவர் பொன்முடி குறித்து கவர்னர் ரவி ஆவேசம்
ADDED : ஏப் 13, 2025 04:44 AM

மதுரை : ''தமிழக ஆளுங்கட்சியை சேர்ந்த உயர்பதவியில் உள்ள ஒருவர் (அமைச்சர் பொன்முடி) பெண்களை தரக்குறைவாக கண்டனத்துக்குரிய வகையில் விமர்சித்துள்ளார். சிவன், விஷ்ணு, நாராயணனை வழிபடுவோரின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார். வேறுவழியின்றி அவரை 'ஜென்டில்மேன்' என மரியாதையாக அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன்,'' என தமிழக கவர்னர் ரவி மதுரையில் பேசினார்.
'கல்விக் கூடங்களில் கம்பர்' என்ற தலைப்பில் மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. கல்லுாரி தலைவர் ஹரி தியாகராஜன் வரவேற்றார்.
பரிசுகளை வழங்கி கவர்னர் ரவி பேசியதாவது: பீகாரில் பள்ளியில் படித்த சிறுவயதில் எனக்கு ஒரு கனவு இருந்தது. அது தற்போது நிறைவேறியுள்ளது. கம்பன் பிறந்த இடம், ராமாயணத்தை அவர் அரங்கேற்றிய இடத்திற்கு புனித யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
கம்பன் பிறந்த தேரழுந்துாருக்கு அண்மையில் சென்றேன். அவர் அடக்கம் செய்யப்பட்ட நாட்டரசன்கோட்டை சமாதிக்கு சென்று தரிசனம் செய்யும் பாக்கியம் இன்று (நேற்று) கிடைத்தது. கம்பராமாயணம் மகா காவியம் மட்டும் அல்ல. தமிழர்களின் அடையாளம், கலாசார பிரதிபலிப்பு. அதன் ஆணிவேராக அடித்தள ஆன்மாவாக திகழ்கிறது. தமிழக கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு மட்டுமல்லாமல் நாடெங்கும் உள்ள படைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கிறது.
தமிழ் இசையின் ஆன்மாவாக விளங்குவது கர்நாடக இசை. ராமனை விடுத்து கர்நாடக இசையை கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. பாரம்பரிய பரதநாட்டியத்தில் கம்பரசம் தோய்ந்துள்ளது. நாடகம், தெருக்கூத்தில் ராமகதை இடம்பெறுகிறது. இசை, நடனம், நாடகத்தில் ராமனின் தனிப்பட்ட ஆளுமை ஓங்கி கோலோச்சுகிறது.
1000 பேர் பிஎச்.டி.,
வடமாநிலங்களில் துளசிதாசர் ராமாயணம் பற்றி வீதிகள் தோறும் பேசப்படுகிறது. அதை ஆராய்ச்சி செய்து 1000 பேர் பிஎச்.டி., பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கம்பராமாயணம் ஒலித்துக் கொண்டிக்கும் என முதலில் எதிர்பார்த்தேன். இங்கு வேறுபட்ட நிலை இருந்ததால் ஏமாற்றமடைந்தேன். இங்குள்ள பல்கலைகளில் கம்பர் பற்றி தனியாக படிக்க இருக்கை ஏற்படுத்தவில்லை. இது பெரும் ஏமாற்றமளிக்கிறது.
தமிழின் பெரும் அடையாளம், மாபெரும் ஆளுமையின் நினைவுகளை அகற்றினால் நம் மொழி, ஆன்மிகம், கலாசாரத்திற்கு நன்மை ஏற்படாது. மனிதன் எப்படி வாழ வேண்டும் என கம்பராமாயணம் கூறுகிறது. அதில் பெண்களின் கண்ணியம் போற்றப்படுகிறது.
சனாதனத்தை டெங்குவுடன் ஒப்பிட்டனர்
சீதையை ராவணன் கவர்ந்து சென்றதை கம்பன் கண்ணியமாக எழுதியிருப்பார். சில தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுங்கட்சியை சேர்ந்த உயர்பதவியில் உள்ள ஒருவர் (அமைச்சர் பொன்முடி) பெண்களை தரக்குறைவாக கண்டனத்துக்குரிய வகையில் விமர்சித்துள்ளார்.
கம்பன் காட்டிய பாதை அழிக்கப்பட்டு வருவதாக அச்சப்படும் சூழல் நிலவுகிறது. வேறுவழியின்றி அவரை 'ஜென்டில்மேன்' என மரியாதையாக அழைக்கும் கட்டாயத்தில் உள்ளேன். பெண்களின் கண்ணியத்திற்கு மட்டும் அவர் சேதம் விளைவிக்கவில்லை. சிவன், விஷ்ணு, நாராயணனை வழிபடுவோரின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ளார்.
இந்த ஜென்டில்மேன் ஒரு தனி நபர் அல்ல. தமிழகத்தில் 70 ஆண்டுகளாக ஒரு சூழல் அமைப்பு நிலவுகிறது. அந்த சூழலின் ஒரு பகுதி அவர். நமது கடவுள்களுக்கு செருப்பு மாலை அணிவித்தனர். சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசினர்.
இங்கு அரசியல் ரீதியான கலாசார படுகொலை நிகழ்த்தப்படுகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் அருளிய, கிராமங்கள் தோறும் பக்தி மணம் கமழும் இம்மண்ணில் கடவுள் வழிபாட்டை கொச்சைப்படுத்தி, புண்படுத்தும் செயல் அரங்கேறுகிறது.
தமிழகம் என்பது ஒரு மாநிலம் அல்ல. இந்தியாவின் பெருமிதம். அதனால்தான் நமது பிரதமர் நரேந்திர மோடி உலகில் எங்கு சென்றாலும் திருவள்ளுவரை போற்றுதல் உட்பட தமிழ் அடையாளங்களை ஏற்படுத்தி வருகிறார்.
இவ்வாறு பேசினார்.
ஜெய்ஸ்ரீராம் என கோஷம்
பேச்சை முடிக்கும் போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பினார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலை துணைவேந்தர் வைத்திய சுப்பிரமணியம், வேலுார் வி.ஐ.டி.,துணைத் தலைவர் செல்வம், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் உமா கண்ணன் பங்கேற்றனர்.

