/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிரானைட் கற்களால் இடையூறு
/
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிரானைட் கற்களால் இடையூறு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிரானைட் கற்களால் இடையூறு
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிரானைட் கற்களால் இடையூறு
ADDED : மார் 26, 2025 03:56 AM

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரானைட் கற்களை குவித்து வைத்துள்ளதால் விஷ ஜந்துகள் மீதான அச்சத்துடனே பொதுமக்கள் நடமாடுகின்றனர்.
இவ்வளாகத்தில் மதுரை ஆர்.டி.ஓ., அலுவலகம், வடக்கு, தெற்கு தாலுகாக்கள், தீயணைப்பு நிலையம், அரசு வாகனங்களுக்கான பணிமனை, சுகாதாரத் துறையின் மருந்து கிடங்கு போன்றவையும் அமைந்துள்ளன. பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகத்திற்குள் பல இடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன. பின்புறம் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகள் உள்ளன. அதேபோல முன்பகுதியில் பெரிய பெரிய கிரானைட் கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ள இடத்திலும் பாதுகாப்பற்ற வகையில் ஏராளமான இடம் வீணாக கிடக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட கற்களை கனிம வள அதிகாரிகள் பறிமுதல் செய்து இங்கே அடுக்கி வைத்துள்ளனர். அதனை அப்புறப்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
அசைக்க முடியாத மெகா சைஸ் கற்கள் என்பதால் அருகில் ஆட்கள் நடமாட்டமின்றி, மரம்செடி, கொடிகளும், புதர்களுமாக அடர்ந்துள்ளது. அருகிலேயே ஓய்வூதியர்கள் சங்க அறைகள் உள்ளன. அவற்றின் வாயிலை மறைத்து கிடக்கும் கற்களினுாடே அவ்வப்போது விஷ ஜந்துகள் நடமாடுகின்றன. இதனால் அப்பகுதிக்கு யாரும் செல்வதில்லை. இந்த கற்களை அப்புறப்படுத்தி இப்பகுதியை பயனுள்ளதாக மாற்ற கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும்.