/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜி.எஸ்.டி., துணை கமிஷனருக்கு ஜாமின்
/
ஜி.எஸ்.டி., துணை கமிஷனருக்கு ஜாமின்
ADDED : ஜன 01, 2025 05:33 AM
மதுரை : ஜி.எஸ்.டி.,வரியை குறைக்க ரூ. 3.5 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் துணை கமிஷனர் சரவண குமாருக்கு ஜாமின் அனுமதித்தும் மற்ற 2 அலுவலர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்தும் மதுரை சி.பி.ஐ., நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை அப்பன் திருப்பதியைச் சேர்ந்தவர் கார்த்திக். லாரி உரிமையாளர். இவர் ஜி.எஸ்.டி., வரி பாக்கி செலுத்த மதுரை பீபிகுளம் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., பிரிவில் துணை கமிஷனராக பணியாற்றும் சரவணகுமாரை அணுகினார்.
வரி பாக்கிக்கான அபராதத் தொகை ரூ.1.5 கோடியில் குறிப்பிட்ட தொகையை குறைக்க, ரூ.5 லட்சம் 'அன்பளிப்பாக' சரவணகுமார் கேட்டார். கார்த்திக் மதுரை ஆத்திகுளம் சி.பி.ஐ., அலுவலகத்தில் புகார் அளித்தார். சி.பி.ஐ., அதிகாரிகள் ஆலோசனைப்படி, கார்த்திக் டிச.17, இரவு பீபிகுளம் அலுவலகத்திற்கு சென்று ரூ. 3.5 லட்சத்தை கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணாவிடம் வழங்கினார்.
மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஜி.எஸ்.டி., அதிகாரிகளை கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள், அத்தொகையை துணை கமிஷனர் சரவணகுமார்தான் வாங்கும்படி தெரிவித்தார்' என்றனர். மூன்று பேரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். டிச.18 ல் மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டிச. 31 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்று நீதிபதி சண்முகவேல் விசாரித்தார். அசோக் குமார், ராஜ் பீர் ராணா தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. காவல்நீட்டிப்பு செய்து ஜன. 2க்கு நீதிபதி ஒத்திவைத்தார். சரவணகுமாருக்கு ஜாமின் அனுமதித்தார். மறு உத்தரவு வரும் வரை அவர் சி.பி.ஐ., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தார்.