ADDED : ஜன 09, 2024 05:46 AM

மதுரை ; ''குரு வழிபாடே சனாதன தர்மம்'' என மதுரையில் அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் நடந்த காஞ்சி மஹா பெரியவரின் ஆராதனை வைபவத்தில் சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசினார்.
நாம சங்கீர்த்தன கலைஞர் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர், மதுரை சத்குரு சங்கீத வித்யாலயம் இசைக்கல்லுாரி முதல்வர் தியாகராஜன், சொற்பொழிவாளர் சீனிவாசனுக்கு மஹா பெரியவா விருதினை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்.
'நடமாடும் தெய்வம்' என்ற தலைப்பில் சீனிவாசன் பேசியதாவது: ஹிந்து சமயத்தில் இறை வழிபாட்டை விட குரு வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதே மரபு. காஞ்சி மஹா பெரியவர் வாழ்நாளில் பாரதம் முழுவதும் நடந்து சென்று தர்மத்தை நிலைநாட்டினார். அவரை நாடிவரும் பக்தர்களுக்கு அருள் புரிவதோடு எந்த சூழ்நிலை இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்குவதில் கவனம் செலுத்தினார். மகான்கள் நடமாடும் தெய்வங்களாக உள்ளனர்.
ஹிந்து சமயத்தில் எல்லா கடவுள்களையும் குருவாகவே வழிபடுகிறோம். எந்த தலத்திற்கு சென்றாலும் இரவு தங்கி விடியற்காலையில் நீராடி வழிபடுவதன் மூலம் இறைவனே குருநாதராக வருகிறார் என்பார் தாயுமானவர். தற்போது பல கோயில்களில் புனித தீர்த்தக்குளங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது வேதனைக்குரியது.மகான்கள், மனிதர்களுக்கு செய்யும் சேவையே மகேஸ்வரனுக்கு செய்யும் சேவையாக நமக்கு சொல்லித் தருகின்றனர். நாமும் மனித வடிவில் இருக்கும் குருநாதர்களை வழிபாடு செய்து மனித குலத்திற்கு சேவை செய்து சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
தொடர்ந்து நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ஆண்டாள் கல்யாண வைபவம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.