/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை
/
கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை
ADDED : டிச 09, 2024 05:39 AM

மதுரை: மத்திய அரசு ஜவுளித்துறை அமைச்சகத்தின் இந்திய கைவினைக் கலைஞர்கள், கிராமப்புற அமைப்பு மற்றும் பயிற்சிக்கான கல்வி மேம்பாட்டு மையம் (பெட்கிராட்) சார்பில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 'காந்தி சில்ப் பஜார்' எனும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை டிச. 15 வரை நடக்கிறது.
நெசவு, காதி பொருட்களுக்கான 10 ஸ்டால்கள் உட்பட 70 ஸ்டால்களில் 19 மாநில கைவினைக் கலைஞர்கள் பொருட்களை நேரடியாக விற்கின்றனர்.
நாட்டுப்புற ஓவியங்கள், அரிய வகை கடற் சங்குகள், மதுரை சுங்குடி சேலைகள், அசாம் கரும்பு, மூங்கில் பொருட்கள், வைக்கோல் படங்கள், கர்நாடகாவின் சன்னப்பட்டணா பொம்மைகள், லக்னோ சிகன்காரி பூத்தையல், கேரளப் பானைகள், வங்காள சேலைகள், புதுச்சேரி தோல் பொருட்கள், ஜூவல்லரிகள், மணி மற்றும் கருங்காலி மாலைகள் விற்பனைக்கு உள்ளன.
பெட்கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் கூறுகையில், ''ஒவ்வொரு மாநிலத்திலும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கைவினைக் கலைஞர்களை தேர்வு செய்து மத்திய அரசு அடையாள அட்டை வழங்குகிறது.
அவர்கள் தயாரிப்பை நேரடியாக சந்தைப்படுத்த வாய்ப்பளித்துள்ளோம். இதன்மூலம் அவர்களின் பொருளாதார வாழ்வு மேம்படுகிறது'' என்றார்.
பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி கூறுகையில், ''இத்திட்டத்தை செயல்படுத்த பெட்கிராட் சார்பில் ஸ்டால்கள், தங்குமிடம் ஏற்பாடு செய்துள்ளோம்.
இக்கண்காட்சி ஆண்டு தோறும் டிசம்பரில் மதுரையில் நடக்கிறது. இங்கு நேரடியாக விற்பதால் வெளிச்சந்தையை காட்டிலும் விலை குறைவு.
தினமும் குலுக்கல் நடத்தி கைவினைப் பொருட்கள் பரிசு வழங்கப்படுகிறது'' என்றார். தினமும் காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.