ADDED : செப் 03, 2026 07:21 PM
மேலுார்: கொட்டக்குடி நுாலகத்தில் செயல்படும் சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகள், பெண்கள் நிம்மதியாக சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கொட்டக்குடியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியினருக்காக கொட்டக்குடியில் 40 ஆண்டுகளாக செவிலியர் குடியிருப்புடன் துணை சுகாதார நிலையம், நல வாழ்வு மையம் செயல்பட்டது. இங்குள்ள 8 கிராமங்கள் தவிர்த்து பனங்காடி, அரசப்பன் பட்டி உள்ளிட்ட 3 ஊராட்சிகளின் கர்ப்பிணிகள் பரிசோதனை, வளர்இளம் பெண்கள், குழந்தைகள் தடுப்பூசிக்காக சுகாதார நிலையத்துக்கு சென்று, வந்தனர். ஆனால் இந் நிலையம் மூடப்பட்டு நுாலகத்தில் செயல்படுகிறது.
அப்பகுதி கர்ப்பிணிகள் சிலர் கூறியதாவது: ஏற்கனவே சுகாதார நிலையம் செயல்பட்ட கட்டடம் வலுவாக உள்ளது. ஆனால் 40 ஆண்டுகள் ஆகிவிட்டதாகக்கூறி அதிகாரிகள் மூடிவிட்டனர். மூன்று ஆண்டுகளாக நுாலகத்தில் குறுகலான இடத்தில் சுகாதார நிலையம் செயல்படுகிறது. ஏராளமான வாசகர்கள் வந்து செல்லும் இடத்தில் சுகாதார நிலையம் செயல்படுவதால் கர்ப்பிணிகள் நிம்மதி இன்றி தவிக்கின்றனர். இடப் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு வரும் பெண்கள் நுாலகத்திற்கு வெளியே காத்து கிடக்கின்றனர். புதிய கட்டடம் கட்ட கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் இவ் விஷயத்தில் தலையிட்டு புதிய சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் கூறுகையில், ‘‘புதிய சுகாதார நிலையம் கேட்டு மனு கொடுத்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் பழைய சுகாதார நிலையத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
