/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு விசாரணை ஆக. 5க்கு ஒத்திவைப்பு
/
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு விசாரணை ஆக. 5க்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு விசாரணை ஆக. 5க்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு விசாரணை ஆக. 5க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 31, 2025 11:19 PM
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கலான வழக்கு விசாரணை ஆக.5க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதி கோரியும் ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், பரமசிவம், ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ராமலிங்கம், திருப்பரங்குன்றம் அப்துல் ஜாபர், ஒசீர்கான், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேல்சித்தமூர் ஜினா காஞ்சி ஜெயின் மடம் லட்சுமிசேனா பட்டாரக் உள்ளிட்டோர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்குகளை ஏற்கனவே நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.
ஜூன் 24ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, சோலை கண்ணன், பரமசிவம், ராமலிங்கம் ஆகியோரது மனுக்களை அனுமதித்தார். ஒசீர்கான் மனுவை பைசல் செய்தார். இதர மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவு பிறப்பித்ததால் 3வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது. ஜூலை 28ல் அவர் விசாரித்தார். பரமசிவம் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி வாதங்களை முன்வைத்தார்.
நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சோலை கண்ணன் தரப்பில் வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அவர், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பது பலகாலமாக உள்ள பழக்க வழக்கம் என்று கூறுவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. கலெக்டர் கூறியதை மட்டும் வைத்து காலங்காலமாக உள்ள பழக்கம் என்று எடுத்துக் கொள்ள முடியாது.
கந்துாரி விழாவில் புனிதர்களின் அடையாளமாக சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கும். அதில் மத நல்லிணக்க அடிப்படையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்பர். ஆனால் திருப்பரங்குன்றத்தில் முதல்முறையாக ஆடு, கோழிகள் பலியிடுவதை கந்துாரி விழாவாக கொண்டாடமுயற்சிக்கின்றனர். அதன் மூலம் மலையின் புனிதம் கெடுகிறது.
மொத்த மலையுமே சிவலிங்க வடிவில் உள்ளதாக லண்டன் பிரிவி கவுன்சில் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு மலை முழுதும் புனிதமாக கருதப்படும் போது, இது போன்ற புனிதம் இல்லாத காரியங்களை மலைமீது செய்வதும் அதற்கு மதச் சாயம் பூசுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியல் சாசனப் பிரிவு 25ல் சில நிபந்தனைகள் உள்ளன. ஆடு மாடுகளும் வாழ உரிமை உள்ளது என அரசியல் சாசனம் கூறுகிறது. எனவே அப்பிரிவு இதற்கு பொருந்தாது. மேலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் மலை உள்ளதால் அதன் அனுமதியுடன் தான் எதையும் செய்ய முடியும்.
மிருக வதை தடுப்பு சட்டத்தின் அடிப்படையிலும் அவற்றை பலியிடுவது தவறாக அமையும். எனவே நீதிபதி ஜெ.நிஷா பானுவின் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் சரியான தீர்ப்பாக இல்லை. நீதிபதி எஸ்.ஸ்ரீமதியின் தீர்ப்பு சரியாக உள்ளது. பழக்க வழக்கம் இருந்தால் சிவில் நீதிமன்றத்தை நாடலாம் என்றார். உரிமையியல் நீதிமன்றத்தில் பழக்க வழக்கங்களை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு வாதங்களை முன்வைத்தார்.
ஆக.5க்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.