/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேட்டூர் அணையிலிருந்து சேலத்திற்குநீர் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
/
மேட்டூர் அணையிலிருந்து சேலத்திற்குநீர் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மேட்டூர் அணையிலிருந்து சேலத்திற்குநீர் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மேட்டூர் அணையிலிருந்து சேலத்திற்குநீர் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூலை 20, 2025 06:59 AM
மதுரை: மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை சேலம் மாவட்ட பாசனத்திற்கு கொண்டு செல்லும் அரசின் திட்டத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு:
காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாக்க பிரிட்டீஷ் ஆட்சியின்போது, காவிரி ஆற்றில் மேட்டூர் அணை கட்டப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் 18 லட்சம் ஏக்கர் பயனடைகின்றன.
மேட்டூர் அணை உபரி நீரை சேலம் மாவட்டம் இடைப்பாடி, சங்ககிரி, ஓமலுார், மேட்டூர் தாலுகாக்களில் 4238 ஏக்கர் பாசனத்திற்கு கொண்டு செல்ல ரூ.565 கோடியில் திட்டத்தை தமிழக பொதுப்பணித்துறை 2019 நவ.12 ல் அறிவித்தது.
இதன்படி மேட்டூர் அணை அருகே திப்பம்பட்டியில் நீரேற்று நிலையம் அமைத்து நீர்நிலைகளுக்கு கொண்டுசெல்லப்படும். இப்பகுதிகள் மேட்டூர் பாரம்பரிய பாசனத்தில் இடம்பெறாதவை.
இத்திட்டத்தால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கும். தமிழக முதல்வராக இருந்த பழனிசாமி சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் ஒப்புதலின் பேரில் திட்டம் அறிவிக்கப்பட்டது. கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். திட்டத்திற்குரிய அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு:
வெள்ள உபரி நீரை மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாவட்டத்திலுள்ள சரகபங்கா உப படுகையிலுள்ள வறண்ட குளங்களுக்கு நீரேற்று பாசனம் மூலம் திருப்பிவிட அரசு ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.565 கோடி. இதை செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்தது.
இது மேட்டூர் அணையின் உபரி நீரை முறைப்படுத்துவதற்காக அனுமதிக்கப்பட்ட நலத்திட்டம். அப்பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் ஆயக்கட்டுதாரர்களுக்கு உதவியாக இருக்கும். இது அரசு எடுத்த கொள்கை முடிவு. நீதித்துறையின் மறு ஆய்வு வரம்பிற்கு அப்பாற்பட்டது. இம்மனு விசாரணைக்கு உகந்ததல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.