/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறுத்தம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறுத்தம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறுத்தம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறுத்தம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : அக் 10, 2025 04:54 AM
மதுரை: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான கூட்ட அறிவிப்பை ரத்து செய்ய தாக்கலான வழக்கில்,'அப்பேரூராட்சி செயல் அலுவலர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான கூட்டம் நடைபெறாது. வேறு செயல் அலுவலர் பொறுப்பேற்றபின் நடைபெறும்,' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கை முடித்து வைத்தது.
ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா (தி.மு.க.). இவர் பேரூராட்சி நிர்வாகத்தை முடக்கியுள்ளார்; வளர்ச்சிப் பணி தடைபட்டுள்ளது; அவர் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்; நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என சில கவுன்சிலர்கள் செயல் அலுவலரிடம் மனு அளித்தனர். இதனடிப்படையில் அக்.9 ல் கூட்டம் நடைபெறும் என செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து சுதா தாக்கல் செய்த மனு:
புகாரளித்த கவுன்சிலர்களில் சிலர் பேரூராட்சி கூட்டத்தில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இடையூறு ஏற்படுத்தினர். ஒரு கவுன்சிலர் பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை நடத்துகிறார். அதற்குரிய வாடகையை பேரூராட்சிக்கு செலுத்துவதில்லை. இவர்கள் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடையவிடாமல் தடுக்கின்றனர். எனக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆனந்த் சி.ராஜேஷ் ஆஜரானார். அரசு தரப்பில், 'ஆலங்குளம் பேரூராட்சி செயல் அலுவலர் பதவி உயர்வில் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான கூட்டம் நடைபெறாது. வேறு செயல் அலுவலர் பொறுப்பேற்றபின் நடைபெறும்,' என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.