/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோவில்பாப்பாகுடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கோவில்பாப்பாகுடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவில்பாப்பாகுடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவில்பாப்பாகுடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 24, 2025 04:42 AM
மதுரை: மதுரை மாநகராட்சியுடன் கோவில்பாப்பாகுடி ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக தாக்கலான வழக்கில், மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கோவில்பாப்பாகுடி ஞானவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவில்பாப்பாகுடி, கருப்பாயூரணி உள்ளிட்ட 16 ஊராட்சிகள், பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை டிச.31 ல் அனுமதியளித்தது.
இதன் மூலம் கோவில்பாப்பாகுடியில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. இணைப்பு தொடர்பான முடிவு எடுக்கும்போது அப்பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்த எவ்வளவு கூடுதல் நிதி தேவைப்படும், அதற்கான நிதி ஆதாரம் எந்தெந்த வகையில் உருவாக்கப்படும் என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் மதிப்பீடு செய்யவில்லை.
ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் நிதி பற்றாக்குறையில் உள்ளது. இச்சூழலில் அதன் எல்லையை விரிவாக்கும்போது குடிநீர் வினியோகம், கழிவுநீர் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, சாலை, மின்சாரம், வீடு, போக்குவரத்து வசதிகளை மாநகராட்சியால் நிறைவேற்றுவது கடினம். கோவில்பாப்பாகுடியை மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கக்கூடாது என ஊராட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதை வலியுறுத்தி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை முதன்மைச் செயலர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன்.
மாநகராட்சியுடன் இணைக்கும் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: ஆட்சேபனைகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறையிடம் பிப்.14 வரை சமர்ப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இம்மனு ஏற்புடையதல்ல' என தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரர் அனுப்பிய மனு, ஆட்சேபனைகளை பரிசீலித்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

