/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜெகபர் அலி உடலை தோண்டி எக்ஸ்ரே எடுக்க ஐகோர்ட் ஆணை
/
ஜெகபர் அலி உடலை தோண்டி எக்ஸ்ரே எடுக்க ஐகோர்ட் ஆணை
ADDED : ஜன 31, 2025 02:20 AM
மதுரை:
புதுக்கோட்டையில், சட்ட விரோத குவாரிகளுக்கு எதிராக போராடியதில் கொலை செய்யப்பட்ட ஜெகபர் அலியின் உடலை தோண்டி, எக்ஸ்ரே எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் வெங்கலுார் மரியம் தாக்கல் செய்த மனு:
என் கணவர் ஜெகபர் அலி, ஏற்கனவே அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர்.
எங்கள் பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் பல கனிமவள குவாரிகளுக்கு எதிராக, சட்ட ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
அவரை குவாரி மாபியாக்கள், ஜன., 17ல் லாரியை மோதவிட்டு கொலை செய்தனர். திருமயம் போலீசார் வழக்கு பதிந்தனர். விசாரணை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டது.
திருமயம் அரசு மருத்துவமனையில் முறையாக பிரேத பரிசோதனை செய்யவில்லை. அதன் அறிக்கையில் முரண்பாடுகள் உள்ளன. உடலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எக்ஸ்ரே கூட எடுக்கவில்லை.
உடலை தோண்டி எடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை தடயவியல் நிபுணர்கள் முன்னிலையில் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எம்.நிர்மல்குமார்: ஜெகபர் அலியின் உடலை இன்று தோண்டி எடுக்க வேண்டும். அதை எக்ஸ்ரே எடுக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
இதில், மனுதாரரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பங்கேற்கலாம். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.