/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'இ -சம்மன்' செயலி மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் ; போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
'இ -சம்மன்' செயலி மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் ; போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
'இ -சம்மன்' செயலி மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் ; போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
'இ -சம்மன்' செயலி மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் ; போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 16, 2025 04:57 AM
மதுரை: அனைத்து போலீசாரும் இ- சம்மனுக்குரிய அலைபேசி செயலியை பயன்படுத்தி சம்மன்களை உடனடியாக அனுப்புவதை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ராமசாமி. இவரது மருமகளின் புகாரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வடமதுரை போலீசார் 2013 ல் வழக்கு பதிந்தனர். வேடசந்துார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதை ரத்து செய்யக்கோரி ராமசாமி உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சர்வாகன் பிரபு: இத்தனை ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பது மனுதாரருக்குத் தெரியாது. 2025 ஜூன் 4 ல் அவருக்கு சம்மன் அனுப்பியபோதுதான் தெரிந்தது. அதன் பின்தான் ரத்து செய்யக்கோரி இந்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். வழக்கை தொடர்ந்து நடத்த புகார்தாரர் விரும்பவில்லை. நடத்துவதால் பயனில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கீழமை நீதிமன்றத்தில் 2013 ல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சம்மன் அனுப்பியுள்ளதை பார்த்து இந்நீதிமன்றம் வியப்படைந்தது.
மனுதாரர் ஒரு மூத்த குடிமகன். புகார்தாரர் வேறு யாருமல்ல, அவரது மருமகள். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படலாம் அல்லது நிரூபிக்கப்படாமலும் போகலாம். ஆனால் சம்மன் அனுப்பப்படாததால் விசாரணை 12 ஆண்டுகளாக முடங்கியுள்ளது உண்மை.
காவல்துறை மற்றும் நீதிமன்ற குறைபாடுகளால் இத்தாமதம் ஏற்படுகிறது. நீதிமன்ற சம்மன்களை உடனடியாக வழங்கப்படுவதை உறுதி செய்வது, இல்லையெனில் அதற்கான காரணங்களை எழுத்துப்பூர்வமாக எஸ்.பி., மற்றும் நீதித்துறை நடுவருக்கு தெரிவிப்பது போலீஸ் ஸ்டேஷனுக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் இன்ஸ்பெக்டரின் சட்டப்பூர்வ கடமையாகும். இது காவல்துறை நிலையாணையில் தெளிவாக உள்ளது. இது தற்போதைய வழக்கில் மீறப்பட்டுள்ளது.
தவறு செய்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை துவங்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்தது. இதுபோன்ற பதில் நீதித்துறையிடமிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து போலீசாரும் இ -சம்மனுக்குரிய அலைபேசி செயலியை பயன்படுத்த டி.ஜி.பி.,வழிகாட்டுதல் பிறப்பித்துள்ளார். இது முறையாக செயல்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இவ்வகையான ஒழுங்கின்மை மீண்டும் நிகழாது. தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி.,உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் மற்றும் பதிவாளர் (ஐ.டி.,) இணைந்து செயல்பட்டு இ- சம்மன்களை உடனடியாக அனுப்புவதை கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
மனுதாரர் கீழமை நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடலாம். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.