/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கொடைக்கானலில் ஆயுத பயிற்சி ஏழு பேர் விடுதலை உறுதி உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கொடைக்கானலில் ஆயுத பயிற்சி ஏழு பேர் விடுதலை உறுதி உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடைக்கானலில் ஆயுத பயிற்சி ஏழு பேர் விடுதலை உறுதி உயர்நீதிமன்றம் உத்தரவு
கொடைக்கானலில் ஆயுத பயிற்சி ஏழு பேர் விடுதலை உறுதி உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : நவ 11, 2025 04:59 AM
மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாவோயிஸ்ட்கள் ஆயுத பயிற்சி மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் 7 பேரை விடுதலை செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
கொடைக்கானல் கீழ்மலை பொய்யாவெளி வனப்பகுதியில் 2008ல் மாவோயிஸ்ட்டுகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், தருமபுரியை சேர்ந்த மாவோயிஸ்ட் நவீன் பிரசாத் கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடினர்.
சட்டவிரோத கூட்டத்தில் பயங்கர ஆயுதம் வைத்திருத்தல், அரசுக்கு எதிராக சதி, அரசுக்கு எதிராக வெறுப்பு அல்லது அவமதிப்பை துாண்டும் வகையில் பேச்சு, எழுத்து, செயலில் ஈடுபடுதல், மத, இன, வேறு சமூக குழுக்களுக்கிடையே விரோதத்தை வளர்த்தல், கொலை முயற்சி, சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டம், ஆயுத சட்டம், வெடிபொருள் சட்ட பிரிவுகளில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிந்தனர்.
நவீன் பிரசாத்துடன் இருந்ததாக மதுரை செந்தில், நீலமேகம், காவியா, ராமநாதபுரம் மாவட்டம் பண்ணையாபுரம் காளிதாஸ், திருவள்ளூர் மாவட்டம் குமாரமங்கலம் சூர்யா, கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரபேட்டை பகத்சிங், செண்பகவள்ளி கைது செய்யப்பட்டனர். விசாரணை திண்டுக்கல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என அந்நீதிமன்றம் 7 பேரையும் 2021ல் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கொடைக்கானல் டி.எஸ்.பி., உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் பி.வேல்முருகன், ஆர்.பூர்ணிமா அமர்வு பிறப்பித்த உத்தரவு: போதிய சாட்சியம், ஆதாரங்கள் இல்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. கீழமை நீதிமன்ற உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீடு தள்ளுபடி செய்யப் படுகிறது என்றனர்.

