/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை இல்லாதது ஏன்; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
அரசு மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை இல்லாதது ஏன்; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை இல்லாதது ஏன்; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை இல்லாதது ஏன்; அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 18, 2024 05:52 AM
மதுரை : 'அரசு மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, கருத்தரிப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தாதது ஏன். இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை வெரோணிகா மேரி 2019 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் 2019 மே 7 இரவு கனமழை பெய்தது. மின்தடை ஏற்பட்டது. அரசு மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் பழுதடைந்ததால், 'வெண்டிலேட்டர்' உதவியால் செயற்கை சுவாசம் பெற்று வந்த நோயாளிகளில் மல்லிகா உட்பட 5 பேர் இறந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவே இதற்கு காரணம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். விசாரணைக்குழு அமைக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் சரியாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
மதுரை எஸ்.ஆர்.டிரஸ்ட் தலைவர் குருசங்கர், ''தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என 2019 ல் மனு செய்தார். அவர்,''மதுரை மற்றும் பிற இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தகுதியான டாக்டர்களைக் கொண்டு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை (பி.எம்.டி.,) மேற்கொள்வதற்கான வசதிகளை உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்,'' என தற்போது கூடுதல் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: அரசு மருத்துவமனைகளில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, கருத்தரிப்பு சிகிச்சை மையங்களை ஏற்படுத்தாதது ஏன். இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜன.7 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டது.