/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் பூங்காவில் இடையூறின்றி பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கண்மாய் பூங்காவில் இடையூறின்றி பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
கண்மாய் பூங்காவில் இடையூறின்றி பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
கண்மாய் பூங்காவில் இடையூறின்றி பாதுகாப்பு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : டிச 15, 2024 06:59 AM
மதுரை : மதுரை ஊமச்சிகுளம் கண்மாயை துார்வாரி, அதிலுள்ள பூங்காவை பராமரிக்க தாக்கலான வழக்கில், 'பூங்காவை பயன்படுத்தும் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசாருக்கும் உள்ளது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
ஊமச்சிகுளம் சுருளிராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு:
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,) சார்பில் புதுநத்தம் சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. அப்பணியின்போது நாகனாகுளம், திருப்பாலை, ஊமச்சிகுளம் கண்மாய்கள் சீரமைக்கப்பட்டன. சுற்றிலும் பூங்காக்கள், நடை பயிற்சி மேற்கொள்ள பாதைகள் அமைக்கப்பட்டன.
ஊமச்சிகுளம் கண்மாய் பூங்காவில் குப்பைகள், மதுபாட்டில்கள் தேங்கியுள்ளன. தெரு நாய்கள் புகுந்துவிடுகின்றன. புற்கள் முளைத்துள்ளன. அவற்றில் பூச்சிகள் உலாவுகின்றன. நடைபாதைகள் சேதமடைந்துள்ளன.
கண்மாயை துார்வார வேண்டும். நடை பாதையை சுத்தப்படுத்த வேண்டும். போதிய மின் விளக்குகள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் நிறுவ வேண்டும். குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். மது அருந்துதல், புகை பிடித்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை நிறுவ வேண்டும்.
பாதுகாவலரை நியமிக்க வேண்டும். பூங்காவை முறையாக பராமரிக்க என்.எச்.ஏ.ஐ.,மற்றும் ஊமச்சிகுளம் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.
என்.எச்.ஏ.ஐ., தரப்பு: பாதுகாவலர் நியமிக்கப்பட்டுள்ளார். குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் முறையாக பராமரிக்கப்படும்.
ஊமச்சிகுளம் போலீஸ் தரப்பு: இது செட்டிகுளம் ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது. பூங்காவில் அடிக்கடி ரோந்து மேற்கொள்கிறோம். யாரையும் மது அருந்த அனுமதிப்பதில்லை. எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளையும் அனுமதிப்பதில்லை. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்: பூங்காவை பயன்படுத்தும் மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டிய கடமை போலீசாருக்கும் உள்ளது. இவ்வாறு உத்தரவிட்டு பைசல் செய்தனர்.