/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கைவிடப்பட்ட குவாரிகள் விபரம் கேட்கிறது ஐகோர்ட்
/
கைவிடப்பட்ட குவாரிகள் விபரம் கேட்கிறது ஐகோர்ட்
ADDED : ஜன 13, 2026 04:42 AM
மதுரை: 'திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகள், அவற்றை நடத்த உரிமம் பெற்றும், பாதுகாப்பு வசதிகள் செய்ய தவறியவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
திருநெல்வேலி, முத்துராமன் தாக்கல் செய்த பொதுநல மனு:
குவாரிகளுக்கு குத்தகை உரிமம் வழங்கும் போது, 10 சதவீதம் பசுமை நிதி வசூலிக்கப்படுகிறது. இவற்றை, கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைக்க, சுற்றிலும் வேலி அமைக்க பயன்படுத்த வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளில் மழைநீர் தேங்குகிறது. இவற்றில், மனிதர்கள், கால்நடைகள் மூழ்கி இறக்கும் அபாயம் உள்ளது. இக்குவாரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட குழு செயல்படுவதில்லை.
மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். பசுமை நிதி மூலம் சீரமைப்பு பணி மேற்கொள்ள வலியுறுத்தி, கலெக்டர், கனிமவள உதவி இயக்குநருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, 'மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகள் எத்தனை; அவற்றை நடத்த உரிமம் பெற்றும், பாதுகாப்பு வசதிகள் செய்ய தவறியவர்கள் மீது மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ஜன., 23ல் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

