/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து ரத வீதிகளில் மேடு பள்ளங்கள்
/
குன்றத்து ரத வீதிகளில் மேடு பள்ளங்கள்
ADDED : அக் 20, 2024 05:41 AM

திருப்பரங்குன்றம், : திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி சட்ட தேரோட்டத்திற்கு முன்பு ரோடுகளின் இருபுறமும் தோண்டிய பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் கிரி வீதி, ரத வீதிகளில் ஒருபுறம் பூமிக்குள் மின் கம்பிகள் பதிக்கும் பணி, மற்றொருபுறம் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடக்கிறது.
இதற்காக பள்ளங்கள் தோண்டி, அதை சரியாக மூடாமல் குண்டும் குழியுமாக விட்டுள்ளனர்.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 3ல் துவங்குகிறது.
திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக நவ. 8 ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சட்ட தேரில் எழுந்தருளுவர். காப்பு கட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, ரதவீதிகள், கிரி வீதியில் தேர் வலம் வரும்.
தேர் எளிதாக வலம் வர ஏதுவாக மேற்கண்ட வீதிகளில் மேடு பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என கோயில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமாரிடம் மனு கொடுத்தார். மண்டல தலைவர் சுவிதா கூறுகையில், ''ரத வீதிகளில் பள்ளங்களை சீரமைக்கும் பணி துவங்கிவிட்டது. சஷ்டி திருவிழா துவங்கும் முன்பாக அனைத்து வீதிகளிலும் பணிகள் நிறைவு பெறும்'' என்றார்.