ADDED : ஏப் 10, 2025 06:37 AM
மதுரை: 'மேலுாரில் அருவிமலை, சோமகிரிமலை, புலிமலைக் குன்றுகளில் பல்லுயிர்களின் வாழ்விடம் காணப்படுவதால் அவற்றை பல்லுயிரிய மரபு தளமாக அரசு அறிவிக்க வேண்டும்' என மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அருவிமலை அடிவாரமான கண்மாய்ப்பட்டி கிராமத்திற்கு வந்த மலைப்பாம்பை வனத்துறையின் மீட்புக் குழுவினர் பிடித்து கொட்டாம்பட்டி வனப்பகுதியில் விடுவித்தனர்.
கண்மாய்ப்பட்டியில் ஆறு மாதத்திற்குள் இரண்டாவது மலைப்பாம்பு பிடிபட்டுள்ளதாக அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அருவிமலை, சோமகிரிமலை, முறிமலை, புலிமலைக்குன்றுகள் அருகருகே அமைந்துள்ளது. இவை பல்லுயிரிய பெருக்கம் நிறைந்தவை. மலைக்குன்றுகளில் 800 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. புலிமலையில் பெருகற்கால பாறை ஓவியங்கள் உள்ளது.
சாம்பல் நிற தேவாங்கு, வெருகு, புனுகுபூனை, குழி முயல், காட்டுப்பன்றிகளின் வாழிடமாக இவை விளங்குகின்றன. இருமாதங்களுக்கு முன்பு சோமகிரிமலை அடிவார வனப்பகுதியில் புள்ளிமான்கள் வசிப்பது ஆவணப்படுத்தப்பட்டது. சோமகிரி மலையில் ராஜராஜசோழன் காலத்து கல்வெட்டு காணப்படுகிறது.
வரலாற்று அடிப்படையிலும் பல்லுயிரிய வகைமை அடிப்படையிலும் மூன்று குன்றுகளும் முக்கியத்துவம் வாய்ந்ததால் இப்பகுதிகளை பல்லுயிரிய மரபு தளமாக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
