/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'கறுப்பு பேட்ஜ்' அணிந்த ஓமியோபதி மாணவர்கள்
/
'கறுப்பு பேட்ஜ்' அணிந்த ஓமியோபதி மாணவர்கள்
ADDED : பிப் 23, 2024 06:14 AM

திருமங்கலம் : தமிழகத்தின் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவ கல்லுாரி திருமங்கலத்தில் செயல்படுகிறது. இங்கு 250 மாணவர்கள் படிக்கின்றனர். ஆண்டுக்கு 50 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுவர். இவர்கள் 4.5 ஆண்டுகள் படிப்பு முடிந்த பின், ஓராண்டு பயிற்சி மருத்துவர்களாக செயல்படுவர்.
பெரும்பாலும் திருமங்கலம் அரசு மருத்துவ மனை அல்லது விரும்பும் ஊரில் உள்ள அரசு மருத்துவமனை ஓமியோபதி பிரிவுகளில் பயிற்சி மருத்துவர்களாக சிகிச்சை அளிப்பர். இந்த காலகட்டத்தில் அரசு மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் உதவித்தொகை வழங்கும். திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவமனையில் இந்தாண்டு பயிற்சி மருத்துவர்களாக 46 பேர் உள்ளனர். இவர்களுக்கு இம்மாதத்துடன் 6 மாதங்களாக உதவித்தொகை வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர். மருத்துவராக பயிற்சி பெறும் போது வெளியில் வீடு எடுத்து அல்லது வேறு தனியார் விடுதிகளில் தங்கி இருக்கும் சூழ்நிலை உள்ளது.
உதவித்தொகை வராததால் வாடகை கொடுக்க முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். இதனைக் கண்டித்து நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து எதிர்ப்பை தெரிவித்தனர். அரசு உடனே உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.