எந்தெந்த வகையில் சிறை பாதுகாப்பை பலப்படுத்தலாம்: கைதிகளிடம் கருத்து கேட்கிறது ஆய்வுக்குழு
எந்தெந்த வகையில் சிறை பாதுகாப்பை பலப்படுத்தலாம்: கைதிகளிடம் கருத்து கேட்கிறது ஆய்வுக்குழு
UPDATED : நவ 18, 2026 05:30 PM
ADDED : நவ 18, 2026 05:30 PM
மதுரை: தமிழக சிறைகளில் எந்தெந்த வகையில் பாதுகாப்பை பலப்படுத்தலாம் என்பது குறித்து தகவல் தெரிவிக்கலாம் என கைதிகள், காவலர்கள், வழக்கறிஞர்கள், மக்களுக்கு சிறை பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் கடந்த அக்.,24ல் தப்பி ஓடினர். இதைத்தொடர்ந்து கோவை சிறையில் ‘ரிமாண்ட்’ செய்வதற்காக அழைத்துவரப்பட்ட கைதி, சிறை வாசலில் இருந்து தப்பி ஓடினார். அடுத்தடுத்த சம்பவங்களால் சிறை டி.ஜி.பி., சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டார். ஜெயிலர் உட்பட 9 பேர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
தேனி சிறை சம்பவத்தை போன்று அடுத்து நடக்கக்கூடாது. அதற்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வுசெய்ய ஓய்வுபெற்ற டி.ஜி.பி., திரிபாதி தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு முதற்கட்டமாக கைதிகள், காவலர்கள், வழக்கறிஞர்கள், மக்களிடம் எந்தெந்த வகைகளில் சிறை பாதுகாப்பை பலப்படுத்தலாம் என கருத்து கேட்க உள்ளது.
சிறை கட்டடங்கள், பாதுகாப்பு குறைபாடுகள், அதை சரிசெய்தல், மேம்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை அளிக்கலாம். காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக உள்ளதா, தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை மாற்றலாமா, என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள், கருவிகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து இமெயிலில் tnprison.highlelvelcommittee@gmail.comல் கருத்து தெரிவிக்கலாம் அல்லது சிறை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு தபாலில் அனுப்பலாம் எனக் குழு அறிவித்துள்ளது.
