/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி படிகளில் ஏறினாலே காசு... காசுன்னுதான் கேட்குதாம்பா... அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் 'கலாய்ப்பு'
/
மாநகராட்சி படிகளில் ஏறினாலே காசு... காசுன்னுதான் கேட்குதாம்பா... அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் 'கலாய்ப்பு'
மாநகராட்சி படிகளில் ஏறினாலே காசு... காசுன்னுதான் கேட்குதாம்பா... அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் 'கலாய்ப்பு'
மாநகராட்சி படிகளில் ஏறினாலே காசு... காசுன்னுதான் கேட்குதாம்பா... அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் 'கலாய்ப்பு'
ADDED : டிச 18, 2025 06:40 AM

மதுரை: 'மதுரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலக படிகளில் ஏறினாலே காசு கொடு... காசு கொடு... னு சத்தம் கேட்குதாம்பா ...' என மாநகராட்சி முறைகேடுகளை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ 'கலாய்த்து' பேசினார்.
மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, குண்டும் குழியமான ரோடுகள், சொத்துவரி முறைகேடு குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா முன்னிலை வகித்தனர்.
யார் அந்த மேலிடம் செல்லுார் ராஜூ பேசியதாவது: மேயர், மண்டல தலைவர்கள், நிலைக் குழுத் தலைவர்கள் இல்லாத ஒரே மாநகராட்சி மதுரை தான்.
இங்கு தான் ரூ.200 கோடிக்கும் மேல் சொத்துவரி முறைகேடு நடந்துள்ளது. அது தொடர்பாக முறையான விசாரணை இல்லை. ஊழல் செய்த ஆளுங்கட்சி நிர்வாகிகளை தி.மு.க., காப்பாற்ற முயற்சிக்கிறது.
அதேபோன்று நகரமைப்பு பிரிவிலும் ரூ.பல கோடி முறைகேடுகள் நடக்கின்றன. மாநகராட்சியில் அந்த அலுவலகத்திற்கு செல்லும் படிகள் கூட காசு... காசு... என கேட்கிறதாம். வீட்டுவசதி வாரிய குடியிருப்பு தலைவராக உள்ள தி.மு.க., பிரமுகரின் சம்பந்தி தான் மாநகராட்சி சி.டி.பி.ஓ.,வாக உள்ளார். அவரை அதிகாரிகள் யாரும் கேள்வி கேட்க முடியவில்லை.
வீட்டு மனை ஒப்புதல், தனி மனை அனுமதியில் ஏராளமான விதிமீறல் நடக்கிறது. கே.கே.நகரில் உள்ள ஒரு தனியார் மாலுக்கு கலெக்டர்கள் சகாயம், அன்சுல்மிஸ்ரா அனுமதி வழங்க மறுத்த நிலையில், தற்போது அனுமதிக்கப்பட்டதன் பின்னணி என்ன. 'மேலிடத்திற்கு' கொடுக்க வேண்டும் என வசூல் நடக்கிறது. யார் அந்த 'மேலிடம்' என விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
அசுத்தத்தில் நம்பர் ஒன் ராஜன்செல்லப்பா பேசுகையில், இரண்டு மாதமாக மேயர், 5 மாதங்களாக மண்டல தலைவர்கள் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சிறந்த மாநகராட்சிக்கான விருது பெற்றோம். ஆனால் இப்போது அசுத்த மாநகராட்சி பட்டியலில் 'நம்பர் ஒன்' ஆக மாறிவிட்டது. மேயரை கூட நியமிக்க முடியாத ஆட்சியாக உள்ளது என்றார்.
சோலைராஜா பேசுகையில், புதிய கட்டடங்களுக்கு 'சிசி' சர்ட்டிபிகேட் வழங்கிய முறைகேடு புகாரால் மாநகராட்சி நகரமைப்பு குழு முடக்கப்பட்டது. அதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை.
சொத்துவரி முறைகேடு போல் நகரமைப்புக் குழு முறைகேடு மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க., நீதிமன்றம் செல்லும் என்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், இளைஞரணி துணைச் செயலாளர் ஜெயபால் உட்பட கவுன்சிலர்கள், நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

