/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவருக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை பி.எப்., ஆணையாளர் தகவல்
/
மாணவருக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை பி.எப்., ஆணையாளர் தகவல்
மாணவருக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை பி.எப்., ஆணையாளர் தகவல்
மாணவருக்கு வேலை தரும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை பி.எப்., ஆணையாளர் தகவல்
ADDED : அக் 08, 2025 07:31 AM

மதுரை : ''படிப்பை முடித்ததும் மாணவருக்கு (பிரஷ்ஷர்) வேலை தரும் நிறுவனங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது'' என மதுரை மண்டல பி.எப்., ஆணையாளர் அழகியமணவாளன் பேசினார்.
லேடி டோக் கல்லுாரியில், பி.எப்., அலுவலகம் சார்பில் 'பிரதம மந்திரி விக் ஷித் பாரத் ரோஸ்கர் யோஜனா' திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ தலைமை வகித்தார். டீன் ஆரோக்கிய சியாமளா பனியரசி வரவேற்றார். கல்லுாரி நிதியாளர் வனிதா மலர்விழி, பி.எப்., அமலாக்க அதிகாரிகள் ஹேமமாலினி, மனோகரன், மாணவிகள் பங்கேற்றனர்.
பி.எப்., கமிஷனர் அழகியமணவாளன் பேசியதாவது: நிதிமேலாண்மையில் முக்கியமானது சேமிப்பு, முதலீடு. முன்பு அஞ்சறைப்பெட்டி, கடுகு டப்பாக்களில் பெண்கள் சேமித்தனர். இன்று அதற்கான வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன. 2008, 2014ல் உலகளவில் பொருளாதார சரிவு, 2020ல் கொரோனா பாதிப்பு காலங்களில் இந்த சேமிப்புதான் நம்மை காப்பாற்றியது.
நாடு வளர்ச்சி அடைய நமக்கு வேலை வேண்டும். இந்தியாவில் வேலைத் தகுதியில் உள்ளோர் 70 கோடி (58 சதவீதம்) பேர். அனுபவம் உள்ளவர்களையே நிறுவனங்கள் தேடுகின்றன. அதனால் படிப்பை முடித்ததும் வேலைதேடும் மாணவரை கைவிடக்கூடாது என்பதற்காக அரசு, பிரதம மந்திரி வளரும் பாரதத்தின் வேலைக்கான திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதில் படித்து முடித்தவுடன் வேலை தேடுவோரை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு ஊழியரை தேர்வு செய்து மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் சம்பளம் வழங்கினால், வேலை அளிப்பவருக்கு மாதம் ரூ.3 ஆயிரத்தை மத்திய அரசு வழங்குகிறது. அதுவே ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரத்திற்குள் சம்பளம் வழங்கினால் மாதம் ரூ.2 ஆயிரம், ரூ.10 ஆயிரத்துக்கு குறைவாக சம்பளம் வழங்கினால் மாதம் ரூ. ஆயிரம் வேலை அளிப்பவருக்கு வழங்கப்படும். இது எல்லா துறைகளுக்கும் 2 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். உற்பத்தித் துறை என்றால் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். மேலும் அந்த ஊழியருக்கும் ஒருமாத சம்பளம் இருதவணையாக வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். மாணவி லாவண்யா நன்றி கூறினார்.