/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லோக்ஆயுக்தா சட்ட வரம்பில் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
/
லோக்ஆயுக்தா சட்ட வரம்பில் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
லோக்ஆயுக்தா சட்ட வரம்பில் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
லோக்ஆயுக்தா சட்ட வரம்பில் முதல்வர் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : நவ 09, 2024 06:04 AM
மதுரை : தமிழக லோக்ஆயுக்தா சட்டத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், 'முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்தால் லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி துறையூர் குருநாதன் தாக்கல் செய்த மனு:
பொது ஊழியர்கள், அமைச்சர்கள், முதல்வர், எம்.பி.,-எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அரசு லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டத்தை 2013 ல் கொண்டுவந்தது. இதைப் பின்பற்றி தமிழக அரசு 2018 ல் லோக்ஆயுக்தா சட்டம் கொண்டுவந்தது.
பிரதமருக்கு எதிரான ஊழல் புகாரை மத்திய அரசின் லோக்பால் அமைப்பு விசாரிக்க வழிவகை உள்ளது. மத்திய அரசின் சட்டப்படி ஒவ்வொரு பொது ஊழியரும் ஆண்டுதோறும் சொத்து மற்றும் கடன் விபரங்களை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை இணையதளத்தில் வெளியிட வேண்டும். லோக்பால் தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் பிரதமர், லோக்சபா சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு பரிந்துரைப்படி தலைவர், உறுப்பினர்களை ஜனாதிபதி நியமனம் செய்வார்.
தமிழக லோக்ஆயுக்தா அமைப்பு தலைவர், உறுப்பினர்கள் தேர்வுக்குழுவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர் இடம்பெறவில்லை. இது மத்திய அரசின் சட்டத்திற்கு முரணானது.
மத்திய சட்டப்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்த தனிப்பிரிவு உள்ளது. மாநிலத்தில் அதுபோன்ற பிரிவு இல்லை. மத்திய சட்டப்படி ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பாலுக்கு அதிகாரம் உள்ளது. மாநில லோக்ஆயுக்தாவிற்கு அதுபோன்ற அதிகாரம் இல்லை.
லோக்ஆயுக்தா அதிகார வரம்பிற்குள் முதல்வர் வரமாட்டார். விலக்களிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் லோக்ஆயுக்தா சட்டம் அதிகாரமற்றதாக உள்ளது. அதை வலுவானதாக மாற்ற சட்டத்திருத்தம் மேற்கொள்ள தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். தமிழக லோக்ஆயுக்தா சட்டம் செல்லாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: முதல்வர் மற்றும் அரசு அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்தால் லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊழல் ஒழிப்பு சட்டம் உள்ளிட்ட சில சட்டங்கள் உள்ளன. லோக்ஆயுக்தா தலைவர், உறுப்பினர்களை தேர்வு செய்யும் குழுவில் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி அல்லது பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட கட்சியின் தலைவர் இடம் பெறுவர்.
இக்குழு பரிந்துரைப்படி தலைவர், உறுப்பினர்களை கவர்னர் நியமிப்பார். அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றி சரியாக பரிசீலித்து தமிழக லோக்ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றுமாறு கோர மனுதாரருக்கு முகாந்திரம் இல்லை. இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள் ஜன.20 க்கு ஒத்திவைத்தனர்.