ADDED : செப் 09, 2026 06:13 PM
மதுரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கட்டப்பட்டு வரும் சர்வதேச நீச்சல்குளம், ஓராண்டைக் கடந்த நிலையில் 2027 பிப்ரவரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.
2025 ஜூலை 11 ல் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான 50 மீட்டர் நீள நீச்சல்குளம், 16அடி ஆழ டைவிங் நீச்சல்குளம், பார்வையாளர் காலரி அமைக்கப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஓராண்டுக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 50 சதவீத பணிகளே முடிந்துள்ளன.
ஒப்பந்தப்படி 2025 ஜூலையில் நீச்சல்குளத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். டைவிங் குளம், நீச்சல்குளத்தின் உள் கட்டுமானப்பணிகள் முடிந்து கான்கிரீட் பூசப்பட்டு ஆறு மாதங்களாகிறது. அதன்பின் பார்வையாளர் காலரி, டைவிங் பலகை அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் பணி துவங்கியுள்ளது.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் கூறுகையில் ‘‘டைவிங் குளம், நீச்சல்குளத்திற்கு இரண்டு காலரிகள் அமைக்க திட்டமிட்டதால் பணி தாமதமானது. 2027 பிப். ல் பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
