/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் திறந்தும் இப்படியா :30 சதவீத வார்டுகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைக்கல
/
முதல்வர் திறந்தும் இப்படியா :30 சதவீத வார்டுகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைக்கல
முதல்வர் திறந்தும் இப்படியா :30 சதவீத வார்டுகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைக்கல
முதல்வர் திறந்தும் இப்படியா :30 சதவீத வார்டுகளில் பெரியாறு கூட்டுக்குடிநீர் கிடைக்கல
ADDED : ஜன 26, 2026 05:32 AM

மதுரை: மதுரையில் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஒன்றரை மாதங்களுக்கு முன் திறந்து வைத்தும் மாநகராட்சியின் 30 சதவீத வார்டுகளுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என பொது மக்கள் புலம்புகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மக்களுக்கு தேவையான 125 எம்.எல்.டி., குடிநீரை வழங்கும் வகையில் அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், ரூ. 2070.69 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்றது. டிச. 7 ல் முதல்வர் ஸ்டாலின் இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
மாநகராட்சி மக்களுக்கு 24 மணிநேரமும் குழாய் மூலம் வீடுகளுக்கே குடிநீர் வினியோகிக்கும் நோக்கத்தில் 5 'பேக்கேஜ்'களாக திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக பெரியாறு லோயர் கேம்ப்பில் இருந்து வரும் நீர் பண்ணைப்பட்டியில் சுத்திகரிக்கப்பட்டு, மாநகராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மேல்நிலைத் தொட்டிகள் நிரப்பி வினியோகிக்கின்றனர். ஒன்றரை லட்சம் இணைப்புகள் மூலம் வீடுகளுக்கு குடிநீ்ர வழங்கும் இத்திட்டத்தில் பணிகள் முழுமை பெறவில்லை. வரத்துக் குழாய்களில் பல்வேறு இடங்களில் 'லீக்கேஜ்' ஏற்பட்டும், வீடுகளுக்கு செல்லும் குழாய்களில் அழுத்தம் தாங்காமல் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டும் வருகிறது.
இத்திட்ட ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்த நிறுவனங்களின் பொறியாளர்கள் குழு, பணிகள் முடிந்து மாற்றலாகியோ அல்லது வேறு நிறுவனங்களுக்கோ சென்றுவிட்டனர். இந் நிலையில் பிரச்னை ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்வது மாநகராட்சி பொறியாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக வார்டு 62, 63, 64, 65, 66 உட்பட 5 மண்டலங்களிலும் 30 சதவீத வார்டுகளில் முழுமையாகவும், 10 சதவீத வார்டுகளில் சில பகுதிகளில் உள்ள வீடுகளுக்கும் இன்னும் இத்திட்டத்தில் குடிநீர் கிடைத்தபாடில்லை.
அ.தி.மு.க., எதிர்கட்சி தலைவர் சோலைராஜா கூறியதாவது: இத்திட்டத்தில் கூடலுார் லோயர் கேம்ப் முதல் மாநகராட்சி பகுதி மேல்நிலைத் தொட்டிகள் வரை தண்ணீரை அளவீடு செய்யும் 'புளோ மீட்டர்' பொருத்தியிருக்க வேண்டும். ஆனால் லோயர் கேம்ப்பில் மட்டுமே அது உள்ளது. முல்லைப் பெரியாறில் இருந்து வரும் தண்ணீர் லோயர் கேம்புக்கு வரும்போது குறைந்து விடுகிறது. இதற்கு காரணம் இடையே வீணாகும் குடிநீரை சரிசெய்ய முடியாததுதான்.
இத்திட்டத்தை கண்காணிக்கும் 'கன்ட்ரோல் ரூம்' (ஸ்கேடா) மாநகராட்சி மெயின் அலுவலகத்தில் செயல்பட வேண்டும். அதுவும் இதுவரை ஏற்படுத்தவில்லை. ஆனால் அமைச்சர்கள் தொகுதியில் உள்ள வார்டுகளில் மட்டும் குடிநீர் வினியோகம் சீராக உள்ளது.
நுாறு வார்டுகளிலும் திட்டம் நிறைவடைந்த பின் தான் துவக்கி வைக்க வேண்டும் என அ.தி.மு.க., வலியுறுத்தியது. பணிகள் அரைகுறையாக முடிந்த நிலையில் முதல்வர் திறந்து வைத்தது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இத்திட்ட குளறுபடிகளை சரிசெய்து, சீரான குடிநீர் வினியோகத்திற்கு கமிஷனர் சித்ரா நடவடிக்கையை முடுக்கிவிட வேண்டும் என்றார்.

