ADDED : டிச 23, 2024 05:22 AM

மேலுார்: பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு மேலுார் பகுதிகளில் வெல்லம் விற்பனை துவங்கினாலும், குறைவான வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் வெல்லத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
மேலுார் பகுதியில் செங்கரும்பு கடித்து சுவைக்க, ஆலை கரும்பு வெல்லம் தயாரிக்க என இருவகை கரும்புகள் உற்பத்தியாகிறது. பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு மேலுார், கொட்டக்குடி, வெள்ளலுார் பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
விவசாயி மதயானை கூறியதாவது: ஆலைக்கரும்பு நடவு செய்வது முதல் வெல்லம் தயாரிப்பது வரை 10 மாதத்திற்கு ஏக்கருக்கு ரூ. 70 ஆயிரம் செலவாகிறது.
ஆனால் அதனால் கிடைக்கும் வெல்லம் ரூ. 72 ஆயிரத்துக்குதான் விற்பனையாகிறது. மேலுார் செம்மண் நிறைந்த பகுதி என்பதால் வெல்லத்தின் சுவை அதிகம். எனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விரும்புகின்றனர்.
இருப்பினும் விலை குறைவு என்பதால் போதிய வருவாய் கிடைப்பதில்லை. கரும்பு விவசாயத்தை ஊக்குவிக்க, அரசே கொள்முதல் நிலையம் அமைத்து விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்க வேண்டும் என்றார்.

