ADDED : பிப் 20, 2025 05:34 AM
மதுரை: ''முதல்வர் ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததை கண்டித்து பிப்.25ல் பள்ளிகள், அரசு அலுவலகங்களை பூட்டும் வகையில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தப்படும் என அதன் நிர்வாகி நீதிராஜன் மதுரையில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை மோசடி செய்து வருகிறார். ஆட்சிக்கு வந்து 4ஆண்டுகளுக்கு பின் பழைய பென்ஷன் திட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு 'இது உங்களுடைய அரசு' என கூறிவிட்டு தற்போது ஏமாற்றிவிட்டார். மேற்கு வங்கம், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழைய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் நிறைவேற்றுவதில் என்ன சிக்கல் உள்ளது. நிதி நிலையை காரணமாக கூறி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தாமல் ஏமாற்றி வரும் முதல்வர், அரசை கண்டித்து பிப்.25ல் மாநில அளவில் பள்ளிகள், அரசு அலுவலகங்களை பூட்டும் வகையில் ஜாக்டோ ஜியோ மறியல் நடத்தப்படும் என்றார்.

